அரபு, இஸ்லாமிய நாடுகளுக்கு சீனா தெரிவித்த ஆதரவு

அரபு, இஸ்லாமிய நாடுகளுக்கு சீனா தெரிவித்த ஆதரவு

2 mins read
5a108e6b-2531-4c18-8d5f-debad291729a
ஜூலை 23ஆம் தேதி பெய்ஜிங்கில் சந்தித்த (இடமிருந்து) பாலஸ்தீன அமைப்பின் மத்திய குழுத் துணைத் தலைவர் மஹ்முத் அல்-அலோனி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாலஸ்தீன இஸ்லாமிய இயக்கத்தின் மூத்த உறுப்பினர் முஸ்ஸா அபு மர்ஸுக். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்த கருத்துக்காக அவரைப் பாராட்டிய சீனா, இது மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரும்பும் உலகளாவிய விருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது என்று கூறியது.

பெய்ஜிங்கின் நிலைப்பாடு அனைத்துலக சமூகத்தின், குறிப்பாக அரபு, இஸ்லாமிய நாடுகளின் விரும்பங்களுடன் ஒத்துப்போகிறது என்று கூறிய அன்வாரின் கருத்துகளுக்கு சீனா பாராட்டுகளைத் தெரிவித்தது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் தெரிவித்தார்.

“பாலஸ்தீனத்தின் உள் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில், சீனாவின் நம்பிக்கையும் முயற்சியின் திசையும் பரந்துப்பட்ட அரபு, இஸ்லாமிய நாடுகளுடன் மிகவும் ஒத்ததாக உள்ளது.

“மலேசியாவும் பிற நாடுகளும் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும், பெய்ஜிங் பிரகடனத்தைச் செயல்படுத்தவும், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு ஆக்கபூர்வமான பங்கை வகிக்கவும் சீனா தயாராக உள்ளது,” என்றும் திரு லின் விவரித்தார்.

பாலஸ்தீன ஒற்றுமையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பெய்ஜிங்கில் கையெழுத்திட்ட ஃபாத்தா மற்றும் ஹமாஸ் இடையேயான ஒப்பந்தத்தை வரவேற்பதாக கடந்த வாரம் அன்வார் கூறியிருந்தார்.

பெய்ஜிங் பிரகடனம் பாலஸ்தீன ஒற்றுமையை அடைவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய படியைப் பிரதிபலிக்கிறது. இது பாலஸ்தீன மக்களின் உரிமைகளை உணர்ந்து கொள்வதில் மிகவும் முக்கியமானது என்று திரு அன்வார் கருத்துரைத்தார்.

இவ்விவகாரத்தில் அனைத்துலக ஆதரவு இன்றியமையாதது என்று குறிப்பிட்ட அன்வார், இதுவரை அவ்வாறு செய்யாத அரசாங்கங்கள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்து இந்த ஒற்றுமை முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரிக்ஸ் அமைப்பில் சேர்வது பற்றி மலேசியா தெரிவித்த விருப்பத்தைத் தொடர்ந்து பிரிக்ஸ் மீது பல்வேறு நாடுகள் காட்டிய ஆர்வத்திற்கு சீனா சாதகமாக பதிலளித்தது. அனைத்துலக ஒழுங்கை மிகவும் நியாயமானதாகவும், சமத்துவமாகவும் மாற்றுவதில் மேலும் “ஒருமித்த எண்ணம் கொண்ட” பங்காளிகளை அது வரவேற்பதாகக் கூறியது.

ஜூன் மாதம், பிரேசிலின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் பிரிக்ஸ் உடன் இணைவதற்கான மலேசியாவின் விருப்பத்தை அன்வார் உறுதிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்