மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சீன வாகனங்களுக்குக் கட்டுப்பாடு: தைவான் ஆலோசனை

1 mins read
6d87eace-84d1-40e4-8468-4e88024b2c2b
சீனாவின் பிஒய்டி கார்கள். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சீனாவின் வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தைவான் ஆலோசித்து வருகிறது.

தாய்லாந்தில் ஒன்றுசேர்க்கப்பட்ட சீனாவின் பிஒய்டி (BYD) வாகனங்களைத் தைவானிய சந்தைக்குள் களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியானது. அதனையடுத்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

“தேசியப் பாதுகாப்பு, வாகனப் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு, தொழில்துறை மேம்பாடு ஆகிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு பல்வேறு வழிமுறைகளில் சீன வாகனங்கள் தைவானுக்குள் நுழைவதை அரசாங்கம் கட்டுப்படுத்தும்,” என்று தைவானிய பொருளியல் விவகார அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) அறிக்கையில் தெரிவித்தது.

தற்போதைய விதிமுறைகளின்படி சீனாவில் முழுமையாக ஒன்றுசேர்க்கப்படும் வாகனங்களைத் தைவானுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பொருள்களைக் கொண்டு தைவானில் ஒன்றுசேர்க்கப்படும் வாகனங்களை உள்ளூரில் விற்க அவை உள்ளூர் தரநிலைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.

தைவானுடன் வர்த்தகம் செய்துவரும் டைக்கு மோட்டோர்ஸ் குழுமத்துடன் (Taikoo Motors Group) இணைந்து செயல்பட்டு தாய்லாந்தில் ஒன்றுசேர்க்கப்பட்ட தங்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய பிஒய்டி முயற்சி செய்துவருவதாக அடையாளம் குறிப்பிடப்படாதோரை மேற்கோள்காட்டி மிரர் மீடியா ஊடகம் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்