சொங்சிங்: தமக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு ஏற்பட்ட பழிதீர்க்கும் விதமாக, கடை ஊழியர்களை 600,000 யுவான் (S$110,00) பணத்தைக் கையால் எண்ண வைத்த பெண் ஒருவர், பின்னர் எதுவும் வாங்காமல் சென்றார்.
இச்சம்பவம் சீனாவின் சொங்சிங் நகரிலுள்ள ஒரு கடைத்தொகுதியில் இருக்கும் லூயி விட்டோன் (Louis Vuitton) கிளையில் நிகழ்ந்ததாக சீனாவின் ‘சோகு’ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஆடை வாங்குவதற்காக அப்பெண் அங்குச் சென்றபோது, கடைக்காரர்களால் அவர் மோசமாக நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
தான் ஒரு பானம் கேட்டபோது கடைக்காரர்கள் தரவில்லை என்றும் புதிய வரவுகளைக் காட்டச் சொன்னபோது, முந்திய பருவங்களில் வந்ததைக் காட்டினர் என்றும் அப்பெண் கூறினார். மேலும் சில ஆடைகளைக் காட்டச் சொன்னபோது அவர்கள் கண்ணை உருட்டிக் காட்டி, பொறுமையின்றிச் செயல்பட்டதாகவும் அப்பெண் சொன்னார்.
தமக்கு நேர்ந்த அனுபவம் குறித்து, லூயி விட்டோன் தலைமையகத்தைத் தொடர்புகொண்டு தெரிவிக்க முயன்றபோதும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றார் அப்பெண்.
இந்நிலையில், தாம் பட்ட அவமானத்திற்கு இரு மாதங்கள் கழித்து அவர் பழிதீர்த்துக்கொண்டார்.
தம் தனி உதவியாளருடனும் நண்பருடனும் ஒரு பை நிறைய பணத்துடன் அக்கடைக்குச் சென்ற அப்பெண், தாங்கள் சில ஆடைகளை வாங்கவிருப்பதாகக் கடை விற்பனையாளர் ஒருவரிடம் கூறினார்.
பின்னர் அவற்றுக்கெல்லாம் பணம் செலுத்தும் வகையில், தம்மிடமிருந்த பணப்பையை விற்பனை உதவியாளர்களிடம் அவர் கொடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் பணத்தை எண்ணி முடிக்க இரண்டு மணி நேரமானது. அவர்கள் பணத்தை எண்ணி முடித்ததும், ஆடை வாங்கும் முடிவை மாற்றிக்கொண்டதாகக் கூறி, கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து நடையைக் கட்டினார் அப்பெண்.
இதுபற்றி ‘ஸியாவ்ஹாங்ஷு’ எனும் சமூக ஊடகத் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது இப்பதிவு இணையவாசிகள் பலரையும் ஈர்த்துள்ளதாக சௌத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
“கடைக்காரர்கள் விலையுயர்ந்த பொருள்களை விற்கலாம். அதற்காக அவர்கள் தங்களையே உயர்ந்தவர்களாக நினைத்துக்கொள்ளக்கூடாது,” என்று இணையவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

