ஓய்வுபெறும் வயதை 65ஆக உயர்த்துவது குறித்து பரிசீலனை: மலேசியப் பிரதமர் அன்வார்

ஓய்வுபெறும் வயதை 65ஆக உயர்த்துவது குறித்து பரிசீலனை: மலேசியப் பிரதமர் அன்வார்

படம்: பெர்னாமா

22 May 2025 - 9:01 pm

1 mins read

கோலாலம்பூர்: ஓய்வுபெறும் வயதை 65ஆக உயர்த்துவது குறித்த பரிந்துரையை அரசாங்கம் சீராய்வு செய்யும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

ஆயினும், அவ்விவகாரம் குறித்து அமைச்சரவை இன்னும் விவாதிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

“ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்த பரிந்துரை இன்னும் அமைச்சரவையின்முன் வைக்கப்படவில்லை. பொதுவாக, அமைச்சரவையில் முன்வைக்கப்படுமுன் அதுபற்றிக் கலந்தாராய்வோம்,” என்று திரு அன்வார் கூறியுள்ளார்.

நிதி, மக்கள்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து முதலில் ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மொழி விருது அறிமுக நிகழ்ச்சியில் வியாழக்கிழமை (மே 22) கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் திரு அன்வார் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் அஸலினா ஒத்மான் சையது அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.

இப்போது 60 வயதில் கட்டாய ஓய்வளிக்கப்படும் அரசாங்க ஊழியர்கள், இன்னும் இளமையாகவும் தங்களால் இன்னும் பங்களிக்க முடியும் என்றும் உணர்வதாகத் திருவாட்டி அஸ்லினா குறிப்பிட்டார்.

வேறு சில நாடுகள் ஓய்வுபெறும் வயதை 65ஆக உயர்த்தத் திட்டமிட்டுவரும் நிலையில், மலேசிய அரசாங்கமும் அதனை ஆராய வேண்டும் என்றும் இது தமது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறினார்.

இதற்குமுன், மலேசியாவில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 11 ஆண்டுகளில் மும்முறை உயர்த்தப்பட்டது.

கடந்த 2001ஆம் ஆண்டில் 55லிருந்து 56க்கும், 2008ல் 58க்கும், பின்னர் 2012ல் 60க்கும் அது உயர்த்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஓய்வுவயதுஅன்வார்அரசாங்க ஊழியர்