நிறுத்தப்பட்ட தேசிய சுகாதாரக் கழகங்களின் ஆய்வு மானியங்கள் மறுபரிசீலனை

2 mins read
b78fa2b8-fa15-4684-a863-42a07d388bc8
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள தேசிய சுகாதாரக் கழகத்தின் முகப்பு தோற்றம். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: பன்முகத்தன்மை தொடர்பான ஆய்வு நிதியைக் குறைப்பது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த ஆய்வாளர்களும் ஜனநாயகக் கட்சி தலைமையிலான மாநிலங்களும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 29) அன்று டிரம்ப் நிர்வாகத்துடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

சட்டப் போராட்டத்தின்போது நிறுத்தப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட மானிய விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்ய டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

பாஸ்டனில் உள்ள மத்திய நீதித்துறையைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், தேசிய சுகாதாரக் கழகங்கள் பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கிய முயற்சிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டதால், நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் ஆய்வு மானியங்களைச் சட்டவிரோதமாக ரத்து செய்ததாக முன்பு தீர்ப்பளித்தார்.

ஆகஸ்ட் மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அந்த முடிவை ஓரளவு நிறுத்தி வைத்தது, நிறுத்தப்பட்ட மானியங்கள் தொடர்பான சட்டப் போராட்டங்களை அரசாங்கத்துடனான நிதி மோதல்களில் நிபுணத்துவம் பெற்ற வேறு நீதிமன்றம் கையாள வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

புதிய கொள்கை அறிவிக்கப்பட்ட பிறகு முடக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அல்லது திரும்பப் பெறப்பட்ட மானிய விண்ணப்பங்களைப் புதிய மதிப்பாய்வுகளை நடத்த அரசாங்கம் ஒப்புக்கொள்வதன் மூலம், தேசிய சுகாதாரக் கழக மானியங்கள் தொடர்பான போராட்டத்தின் ஒரு பகுதியை இந்த ஒப்பந்தம் தீர்த்து வைத்தது. இந்த ஒப்பந்தம் எந்தவொரு குறிப்பிட்ட ஆய்வு திட்டத்திற்கும் நிதியளிக்க தேசிய சுகாதாரக் கழகத்தைக் கட்டாயப்படுத்துவதில்லை.

தேசிய சுகாதாரக் கழகம் மீது வழக்குத் தொடர்ந்த ஆய்வாளர்கள், டிசம்பர் 29ஆம் தேதி அன்று, முன்மொழியப்பட்ட மானியங்கள் எச்ஐவி தடுப்பு, அல்சைமர் நோய், ஓரின மற்றும் மாற்றுப் பாலினச் சமூகத்தின் சுகாதாரம், பாலியல் வன்முறை உள்ளிட்ட பொது சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் என்று கூறினர்.

“இந்த ஒப்பந்தம் எனது மானிய விண்ணப்பத்தையும், இன்னும் பலவற்றையும் தன்னிச்சையான, அழிவுகரமான முடக்கத்திற்குப் பிறகு மறுஆய்வுக்கு நகர்த்த அனுமதிக்கிறது,” என்று நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆய்வாளரான நிக்கி மாஃபிஸ் கூறினார். அவர் வயதானவர்கள் மூளையில் அல்சைமர் நோய் மற்றும் மது அருந்துதல் பற்றி ஆய்வு செய்கிறார்.

பன்முகத்தன்மை தொடர்பான ஆராய்ச்சிக்கான மானிய நிதியை நிறுத்தும் தேசிய சுகாதாரக் கழகத்தின் கொள்கையைத் தடுத்த வழக்கில் அமெரிக்க மாவட்ட நீதிபதி வில்லியம் யாங் வழங்கிய முந்தைய தீர்ப்பை இந்த ஒப்பந்தம் பாதிக்காது.

அமெரிக்க சுகாதார, மனித சேவைகள் துறை அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் அறிவியல் ரீதியான கடுமையான மற்றும் அமெரிக்க மக்களுக்கு அர்த்தமுள்ள விளைவுகளைவிட கருத்தியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு முன்னுரிமை அளித்த ஆய்வுக்கான நிதியை நிறுத்துவதற்கான அதன் முடிவில் உறுதியாக இருப்பதாக அந்தத் துறை கூறியுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்