சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அந்நாட்டுக் கிராமப்புறங்களில் தற்போதுள்ள இணையச் சேவையின் வேகத்தை 5,000 மடங்கு அதிகரிக்கக்கூடிய உலகின் முதல் 6ஜி தொழில்நுட்பச் சில்லுவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தகவலை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) வெளியிட்ட ஹாங்காங்கின் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (SCMP) நாளிதழ், கிராமப்புறத்திற்கும் நகர்ப்புறத்திற்கும் உள்ள இணையப் பிளவை இத்தொழில்நுட்பம் குறைக்க உதவும் என்றது.
பெய்ஜிங்கைச் சேர்ந்த பெக்கிங் பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங் நகரப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த 6ஜி அலைவரிசைச் சில்லு, ஒரு விநாடிக்கு 100 ஜிகாபைட்சுக்கும் அதிகமான இணைய வேகத்தை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்தச் சில்லுகள், போதிய இணைய வசதி இல்லாத பகுதிகளில் அதிவேக இணையத்தை எளிதில் கிடைக்கச் செய்து, 50ஜிபி கொண்ட உயர்தர திரைப்படத்தை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய உதவும்.
இந்தத் தொழில்நுட்பத்தில் நன்மைகள் இருந்தாலும் 6ஜியால் ஏற்படும் மின்காந்தக் கதிர்வீச்சால் உடல்நலக் கேடுகள் குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன.
அதிக சாதனங்கள் இணைக்கப்படுவதால் இணையத் தாக்குதல்களுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கக்கூடும். மேலும், விரிவடைந்து வரும் உட்கட்டமைப்பின் சுற்றுச்சூழல் பாதிப்புகளும், கிராமப்புறங்களை மேலும் பின்தங்கச் செய்து இணைய இடைவெளியை அதிகரிக்கக்கூடும் என கவனிப்பாளர்கள் கவலைப்படுகின்றனர்.
இணையத் தொடர்பு அதிகரிப்பதால் கண்காணிப்பு மற்றும் தரவு தனியுரிமைப் பிரச்சினைகளும் அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.