பாக்கு: பருவநிலை (COP29) மாநாட்டில் பருவநிலை மாற்றத்திற்கான உலகளாவிய நிதியை 2035ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 300 பில்லியன் (S$404 பில்லியன்) டாலருக்கு உயர்த்த பணக்கார நாடுகள் சம்மதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இதர பணக்கார நாடுகள் அதற்கு இணங்கியுள்ளதாக அவ்வட்டாரங்கள் நவம்பர் 23ஆம் தேதி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
நவம்பர் 22ஆம் தேதி அஸர்பைஜான், 250 பில்லியன் யுஎஸ் டாலர் நிதிக்கு முன்மொழிந்திருந்தது. ஆனால் இது, அவமதிக்கத்தக்க அளவு மிகவும் குறைவு என வளரும் நாடுகள் சுட்டியதால் நிதியை உயர்த்த பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டதாக தகவல்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.
மூடிய கதவுகளுக்குப் பின்னால் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ஐரோப்பிய நாடுகள், நிதி உயர்வுக்கு ஒப்புக்கொள்ள முன்வந்ததாக அது குறித்து நன்கறித்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அஸர்பைஜானில் உள்ள பாக்குவில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாநாட்டில் பருவநிலை நிதிக்கான வரைவு ஒப்பந்தத்திற்காக பேராளர்கள் விடிய விடிய விவாதித்தனர். ஆனால் பணக்கார நாடுகள் தங்களுடைய நிலையை மாற்றிக் கொண்டனவா என்பது பற்றி தகவல் இல்லை.
இந்தப் பேச்சுவார்த்தை விவரங்களை வெளியிட ஐரோப்பிய ஆணையத்தின் பேச்சாளரும் மறுத்து விட்டார்.
பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்கப் பேராளர்களும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.