தைப்பே: டிக்டாக் நிறுவனம், அதிகாரபூர்வமாய் இரண்டு நிறுவனங்களாகச் செயல்பட முடிவெடுத்ததைத் தொடர்ந்து, சீன நிறுவனங்கள் உலக அளவில் புதிய சந்தைகளுக்குள் நுழைவது குறித்து யோசித்து வருகின்றன.
டிக்டாக் நிறுவனம் இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்படும் என்று சீன இணையப் பெருநிறுவனமான பைட்டான்ஸ் வியாழக்கிழமை (ஜனவரி 22) அறிவித்தது. அமெரிக்காவில் டிக்டாக் செயலி நீடிப்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆறாண்டுப் போராட்டத்திற்குப் பிறகு, பைட்டான்ஸ் நிறுவனம் அதனைப் பிரிக்க முடிவெடுத்தது. அமெரிக்காவுக்கென ஒன்றும் உலகின் மற்ற பகுதிகளுக்கென இன்னொன்றும் என டிக்டாக் பிரிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல பகுதிகளுக்கும் கிளை பரப்ப விரும்பும் சீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டிக்டாக்கின் நிலைமை, அவற்றுக்கு முன்பிருக்கும் சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் என்று நம்பப்படுகிறது.
அத்தகைய நிறுவனங்கள், உலகச் சந்தைக்குள் நுழைய வேறு பாதைகளையும் தேர்ந்தெடுக்கலாம்; அவற்றில் சிக்கல் குறைவாக இருக்கலாம்; ஆனால் அதே நேரம் உலகின் ஆகப் பெரிய பொருளியலை அணுகமுடியாத நிலைமை ஏற்படக்கூடும் என்று கூறப்பட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகப் பூசல் ஏற்பட்ட நேரங்களில் டிக்டாக் விவகாரம் பேசுபொருளாக இருந்தது. அமெரிக்க அதிகாரிகளும் முதலீட்டாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மாதிரியைக் கண்டுபிடித்துவிட்டதாகச் சில சீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் கருதின.
டிக்டாக் போன்ற சில நிறுவனங்கள், அவற்றின் தலைமையகத்தைச் சீனாவுக்கு வெளியே சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு மாற்றியுள்ளன. வேறு சில நிறுவனங்கள் அமெரிக்கப் பயனீட்டாளர்களை ஈர்க்க மில்லியன் கணக்கான டாலரை விளம்பரத்திற்காகச் செலவிடுகின்றன. சில நிறுவனங்கள், சீனாவில் உள்ள பயனீட்டாளர்களுக்கு அவற்றின் சேவைகளைத் தடை செய்துள்ளன.
சென்ற ஆண்டு (2025) டிசம்பர் மாதம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான மேனஸ், அரசியல் பிரச்சினையில் சிக்குவதைத் தவிர்க்கும் வழியைக் கண்டுபிடித்துவிட்டதைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. மெட்டா நிறுவனம், இரண்டு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேனசை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. மேனசை உருவாக்கியவர்கள், சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள். சீனாவில் அதற்குக் கிளை நிறுவனங்கள் உள்ளன. ஆனால் நிறுவனம் சென்ற ஆண்டு அதன் தலைமையகத்தைச் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு மாற்றியது. அதன் சேவைகளைச் சீனாவில் பயன்படுத்த முடியாது.
சீன நிறுவனங்கள், புதிய சந்தைகளை உடனடியாகத் தேடவேண்டிய நிலையில் இருக்கின்றன. சொத்துச் சந்தை வீழ்ச்சி கண்டதால் பயனீட்டாளர்கள் செலவுசெய்யத் தயங்குகின்றனர். அதனால் உணவு விநியோகம் முதல் மின்வாகனம் வரை, பல துறைகளிலும் சீன நிறுவனங்கள் குறைவான லாபத்தைப் பெறுவதற்கே அதிகம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

