தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவில் கொவிட்-19 சம்பவங்கள் சற்று கூடியது இயல்பானதே: வல்லுநர்கள்

2 mins read
2048ef76-ad4f-4309-a007-ea42d959dd7f
சீனாவில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளன. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனாவின் வெளிநோயாளி மருந்தகங்களில் சளிக்காய்ச்சல் சம்பந்தப்பட்ட சம்பவங்களின் விகிதம் சற்று அதிகரித்துள்ளது.

எனினும், கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுக்குள் இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கும் இம்மாதம் நான்காம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரிடையே கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானது உறுதியானோரின் எண்ணிக்கை 7.5லிருந்து 16.2 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் புதன்கிழமை (மே 14) வெளியிட்ட புள்ளி விவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மோசமான சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரிடையே கொவிட்-19 தொற்றுக்கு ஆளானது உறுதியானோரின் எண்ணிக்கை 3.3லிருந்து 6.3 விழுக்காட்டுக்குக் கூடியது என்பதும் அந்தப் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

எனினும், கிருமித்தொற்று எண்ணிக்கை இப்படி மாறிக்கொண்டே இருப்பது சாதாரணம்தான் என்று மருத்துவர்கள் கூறுவதாக ஹெல்த் டைம்ஸ் சஞ்சிகை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மோசமாக நோய்வாய்ப்பட்டோரில் மிகக் குறைவானோரையே மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குவாங்சூ எய்த் பீப்பல்ஸ் மருத்துவமனையின் தொற்றுநோய் நிலையத் தலைமை வல்லுநர் கய் வெய்ப்பிங் கூறினார். தற்போதைய கொவிட்-19 அலைக்கும் முந்தைய அலைகளுக்கும் வித்தியாசம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 உள்ளிட்ட சுவாச நோய்க் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அவ்வப்போது ஏற்ற இறக்கமாக இருப்பது வழக்கம்தான் என்று சீனாவின் வூஹான் யூனியன் மருத்துவமனையின் தொற்றுநோய்ப் பிரிவின் தலைமை மருத்துவர் சாய் லெய் குறிப்பிட்டார். அதேவேளை, விழிப்புடன் இருக்குமாறும் அவர் மக்களை எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்சீனாகிருமித்தொற்றுகொவிட்-19