ஆசியாவில் இணையக் குற்றங்கள், மோசடிகள் அதிகரிப்பு: இன்டர்போல்

ஆசியாவில் இணையக் குற்றங்கள், மோசடிகள் அதிகரிப்பு: இன்டர்போல்

2 mins read
a363cf04-c446-405c-ae43-e00b37f58c2f
இன்டர்போல் நடத்திய ஆய்வில் பங்கேற்ற 18 நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை, தங்கள் நாட்டில் பதிவான மொத்தக் குற்றங்களில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமானவை இணையக் குற்றங்கள் என்று தெரிவித்துள்ளன. - மாதிரிப்படம்: பிக்சாபே

ஆசிய, தென்பசிபிக் நாடுகள் பலவற்றில் இணையக் குற்றங்களும் மோசடிகளும் அதிகரித்துள்ளதாக அனைத்துலகக் காவல்துறை (இன்டர்போல்) எச்சரித்துள்ளது.

இன்டர்போல் நடத்திய ஆய்வில் பங்கேற்ற 18 நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை, தங்கள் நாட்டில் பதிவான மொத்தக் குற்றங்களில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமானவை இணையக் குற்றங்கள் என்று தெரிவித்துள்ளன.

மேலும், மூன்றில் ஒரு பங்கு நாடுகள் 10,000க்கும் மேற்பட்ட இணையவழி மோசடி வழக்குகளைப் பதிவுசெய்துள்ளன.

2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 மார்ச் வரை அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. ஆயினும், அதில் பங்கேற்ற நாடுகள் எவை என்பதை இன்டர்போல் குறிப்பிடவில்லை.

“செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பிணைநிரல், அதிநவீன ஏமாற்று உத்திகளைப் பயன்படுத்தி, தொழில்முறை அளவில் அக்குற்றங்கள் அரங்கேற்றப்படுகின்றன,” என்று சிங்கப்பூரிலுள்ள இன்டர்போல் இணையக் குற்றப் பிரிவு இயக்குநர் நீல் ஜெட்டன், ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளார்.

ஆசிய, தென்பசிபிக் வட்டாரங்களில் 2024ஆம் ஆண்டில் மட்டும் 135,000க்கும் அதிகமான பிணைநிரல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் சொத்துச் சந்தை, உற்பத்தி, நிதிச் சேவைகள் ஆகிய துறைகள் பாதிக்கப்பட்டன.

இந்த வட்டாரத்தில் மின்வழிப்பறி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பத்தாயிரம் பேரில் 55 பேர் மாதந்தோறும் மோசடி இணைப்புகளைச் சொடுக்குவது தெரியவந்துள்ளது.

தென்கிழக்காசியாவில் ஆள்மாறாட்ட மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் வன்போலிகள் (deepfakes) சார்ந்த விவாதங்கள் 600 விழுக்காடு கூடின.

மேலும், அரசு இணையத்தளங்களை இலக்காகக் கொண்ட, பரவலாக்கப்பட்ட சேவை மறுப்புத் (டிடிஓஎஸ்) தாக்குதல்களும் 92 விழுக்காடு அதிகரித்தன.

கம்போடியா, லாவோஸ், மியன்மார் போன்ற நாடுகளில் பரவியிருந்த அத்தகைய மோசடி நிலையங்கள், தற்போது ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கும் விரிவடைந்து சிறிய அளவிலான குழுக்களாகச் செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

வலுவான இணையத் தற்காப்பைக் கொண்டுள்ளதாகக் கருதும் வளர்ந்த நாடுகளும் இணைய மோசடிப் பேர்வழிகளால் அதிகமாகக் குறிவைக்கப்படுகின்றன.

இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் வளரும் நாடுகளுக்கும் சிறிய தீவு நாடுகளுக்கும் தடயவியல் கருவிகள், போதிய தொழில்நுட்ப வசதிகள், பயிற்சி போன்றவை இல்லாதது பெருஞ்சவாலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போதுள்ள இருபடிச் சரிபார்ப்பு (2FA) போன்ற பாதுகாப்பு முறைகள் போதுமானதாக இல்லை என்றும் பயனரின் இருப்பிடம், செயல்பாடுகளின் அடிப்படையிலான நிகழ்நேர ‘தகவமைப்புச் சரிபார்ப்பு’ முறையே அதற்குச் சிறந்த தீர்வு என்றும் இன்டர்போல் பரிந்துரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்