சோங்சிங்: சீனாவின் கிராம, நகர நிர்வாக அதிகாரிகள் மீதான ஊழல் சம்பவங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் (2024) அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழலை ஒடுக்கும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் இத்தகவல் வெளியானது.
கிராமக் குழுக்களின் இயக்குநர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 77,000ஆகப் பதிவானதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டு அடிப்படையில் இது 67.4 விழுக்காடு அதிகம்.
அதே காலகட்டத்தில், நகர நிர்வாக அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளின் எண்ணிக்கை 89,000ஆகப் பதிவானது. 2023ன் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்புநோக்க இது 36.9 விழுக்காடு அதிகம்.
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை சீனாவில் மொத்தம் 642,000 ஊழல் சம்பவங்கள் பதிவாயின. ஒப்புநோக்க, 2023ஆம் ஆண்டு முழுவதும் பதிவான ஊழல் சம்பவங்களின் எண்ணிக்கை 626,000.
குறிப்பாக கிராம நிர்வாகத்தில் ஊழல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக ஊழல் ஒழிப்புப் பிரிவின் தலைவர் லி ஸி கூறினார்.
நவம்பர் 20ஆம் தேதி ஆற்றிய உரையில், அடித்தள அமைப்புகளின் உறுப்பினர்களுடன் மேலும் அணுக்கமாகப் பணியாற்றும்படி அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். அரசாங்க நிதியை உள்ளூர் அதிகாரிகள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதைக் கவனிக்கப் பொதுமக்களை ஊக்குவிக்கும்படியும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
சீனாவின் அதிபராகப் பொறுப்பேற்றது முதல் ஊழலுக்கு எதிரான போரைத் தமது சிறப்புப் பொதுக் கொள்கையாகக் கடைப்பிடிக்கிறார் திரு ஸி ஜின்பிங்.

