சோல்: தென்கொரியாவில் 2022ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 25.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதன் தொடர்பில், 2026ஆம் ஆண்டின் முற்பாதியில் 112 உயிரிழப்புச் சம்பவங்கள் அந்நாட்டில் பதிவாகின.
பள்ளி மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் குறித்து கல்வி அமைச்சின் புள்ளிவிவரங்களை மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதியும் தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினருமான சியோ பியோம்-சூ வியாழக்கிழமை (அக்டோபர் 22) வெளியிட்டார்.
அதில், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 194ஆகவும் 2023ஆம் ஆண்டு 214ஆகவும் 2024ஆம் ஆண்டு 221ஆகவும் 2025ஆம் ஆண்டு 244ஆகவும் பதிவானதாகக் குறிப்பிடப்பட்டது.
மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தென்கொரியாவில் பள்ளி மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அந்த அறிக்கை காட்டுகிறது.
கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்களில் 146 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 92 நடுநிலைப் பள்ளி மாணவர்கள், ஆறு தொடக்கப் பள்ளி மாணவர்கள் அடங்குவர்.
மாணவர்களின் உயிரிழப்புக்கான பின்னணிக் காரணங்களைக் கண்டறிவதில் குறைபாடுகள் இருப்பதைத் திரு சூ சுட்டினார்.
300 சம்பவங்களில் உயிரிழப்புக்கான காரணம் அறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
