நியூயார்க்: உயர்ந்து வரும் கடல்மட்டம் காரணமாகத் தாழ்வான தீவு நாடுகள் சந்திக்கும் ஆபத்தைக் குறைக்க, உடனடி நடவடிக்கை கோரும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் (ஐநா) வியாழக்கிழமை (செப்டம்பர் 24) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி, 2024ஆம் ஆண்டில் மட்டும் கடல் மட்டம் 6 மில்லிமீட்டர் உயர்ந்துள்ளது. இது இதுவரையிலான மிக அதிகமான உயர்வாகும். தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் ஒரு மீட்டர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
“கடல்மட்டம் மில்லிமீட்டரில் அளக்கப்பட்டாலும், அதன் தாக்கம் மில்லியன்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாதிப்பதாக உள்ளது. தீவு நாடுகளும் அவற்றின் கலாச்சாரமும் கடலில் மூழ்கிப் போவதை உலகம் அனுமதிக்க முடியாது,” என்று ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலையுடன் குறிப்பிட்டார்.
கடல்மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறைந்தாலும், ஒரு நாட்டின் கடல்சார் உரிமைகளும் அதன் தனித்துவமான இறையாண்மையும் தொடர்ந்து நீடிக்கும் என்று இந்தத் தீர்மானம் சட்டபூர்வப் பாதுகாப்பு அளிக்கிறது.
“எங்களைப் போன்ற தீவு நாடுகளுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம். இந்தத் தீர்மானம் எங்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி,” என்று சிறிய தீவு நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் பேசிய பாலாவு அதிபர் சுரங்கெல் விப்ஸ் ஜூனியர் தெரிவித்தார்.
“கடல்மட்டம் ஒரு சென்டிமீட்டர் உயர்ந்தால், ஒரு மீட்டர் கரையை அது விழுங்கிவிடும். சதுப்புநிலக் காடுகளை வளர்ப்பதன் மூலம் கடல் சீற்றத்திலிருந்து கரைகளைப் பாதுகாப்பதுடன், கரிம உமிழ்வையும் கட்டுப்படுத்த முடியும்,” என்று கூறினார் கடல் துறை வல்லுநர் டாம் மார்ட்லாக்.
பாதிக்கப்படும் நாடுகளுக்குத் தேவையான நிதியுதவி வழங்கி, பசுமைக்குடில் வாயு உமிழ்வைக் குறைப்பது இத்தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும்.
