தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெப்பநிலை அதிகரிப்பால் பனி உருகி கடல்மட்டம் உயரும்: ஐநா அறிக்கை

2 mins read
8e14565b-67b9-48ad-85cd-3eeb7464cdae
வெப்பநிலை உயர்வால் பனிப்பாறைகளும் கடற்பரப்பிலுள்ள பனிக்கட்டிகளும் வேகமாக உருகி வருகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனீவா: கடந்த 2024ஆம் ஆண்டில் பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse gases) வெளியீடு முன்னில்லாத அளவு இருந்ததால் வளிமண்டல வெப்பநிலையும் சாதனை அளவு உயர்ந்தது.

அது பனிப்பாறைகளையும் கடற்பரப்பில் உள்ள பனிக்கட்டிகளையும் உருகுவதை மேலும் முடுக்கிவிட்டுள்ளதால் கடல்மட்டம் உயரக்கூடும் என்று ஐநா உலக வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், வருடாந்தர சராசரி வெப்பநிலையானது, தொழிற்புரட்சிக்கு முந்திய காலத்தைவிட 1.55 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது என்றும் இது 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் 0.1 டிகிரி செல்சியஸ் அதிகம் என்றும் உலக வானிலை நிறுவனம் தனது வருடாந்தர பருவநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 1850-1900 காலகட்டத்தில் இருந்ததைவிட வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் 2015 பாரிஸ் உடன்பாட்டின்படி உலக நாடுகள் ஒத்துக்கொண்டுள்ளன.

சூரியச் சுழற்சியில் மாற்றம், பேரளவிலான எரிமலை வெடிப்பு உள்ளிட்ட வேறு சில காரணங்களும் உலகளவில் கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகரிக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில வட்டாரங்களில் வெப்பநிலை குறைவாகப் பதிவானபோதும், பொதுவாக உலக அளவில் மோசமான வானிலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வறட்சியால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது; வெள்ளத்தாலும் காட்டுத்தீயாலும் ஏறத்தாழ 800,000 பேர் இடம்பெயர வேண்டியதாயிற்று.

பெருங்கடல் வெப்பநிலையும் முன்னில்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடற்பரப்பு சூடாவதும் வேகமடைந்துள்ளது. இவற்றால், பெருங்கடல்களில் கரியமிலவாயு அடர்த்தி அதிகரித்து, அதன் அமிலத்தன்மையையும் கூட்டுகிறது.

பனிப்பாறைகளும் கடற்பரப்பிலுள்ள பனிக்கட்டிகளும் விரைவாக உருகுவதால் கடல்மட்டமும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 1993-2002 காலகட்டத்தில் கடல்மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 2.1 மில்லிமீட்டர் உயர்ந்த நிலையில், 2015-2024 காலகட்டத்தில் அது 4.7 மில்லிமீட்டராகப் பதிவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்