பேங்காக்: தனக்குத் தெரியாதவர் எனக் கூறப்படும் ஒருவருக்காகப் போதைப்பொருளைக் கொண்டுசென்றதாக நம்பப்படும் தாய் ஏர்வேஸ் விமானச் சிப்பந்தி அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ‘கிரெளட்ஷிப்பிங்’ எனப்படும் தங்களின் பொருள்கள்/பெட்டிகளைப் பிறர் எடுத்துச்செல்ல வகைசெய்யும் முறைமீது கவனம் அதிகரித்துள்ளது. அந்த முறையின் மூலம் ஒருவர் தனக்குக் கூடுதல் எடைக்குப் பொருள்களைக் கொண்டுசெல்ல அனுமதி இருந்தால் அதனைக் கொண்டு பிறருக்கு உதவலாம்.
கைதான பெண்
ஒரு கிலோகிராமுக்கும் மேலான ஹெராயினை மெல்பர்ன் நகருக்குள் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி கடத்திவர முயன்றதாக சம்பந்தப்பட்ட 26 வயது தாய்லாந்து நாட்டவர்மீது ஆஸ்திரேலியக் காவல்துறையினர் குற்றச்சாட்டு சுமத்தினர். ஃபேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்ட முகம் தெரியாத ஒருவருக்காகப் பெட்டிகளை எடுத்துச்செல்ல அவர் கிட்டத்தட்ட 335 வெள்ளி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் தென்கிழக்காசியப் பயணிகளிடையே ‘கிரெளட்ஷிப்பிங்’ சேவை பிரபலமாக இருந்துவருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக், லைன் போன்ற தளங்களில் அதுகுறித்த விளம்பரங்கள் இடம்பெறுவது காரணம்.
அதன்படி, பொதுவாக ஒரு கிலோ எடைக்கு 10லிருந்து 30 வெள்ளிக்கு இடைப்பட்ட கட்டணத்துக்குப் பயணிகள் பிறரின் பெட்டிகளை எடுத்துச்செல்ல உதவலாம்.
சேவை தவறாகப் பயன்படுத்தப்படலாம்
இந்நிலையில், குற்றவாளிகளும் அந்தச் சேவையைப் பயன்படுத்தலாம் என்று ஆஸ்திரேலிய, தாய்லாந்துக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ஒருவருக்குத் தெரியாமல் அவர் மூலம் சட்டவிரோதப் பொருள்களை வேறொருவர் அனுப்பி வைக்க முடியும் என்று இருநாட்டுக் காவல்துறையினரும் குறிப்பிட்டனர்.
பிடிபட்ட தாய் ஏர்வேஸ் சிப்பந்தியும் தனக்கு அந்த நிலை ஏற்பட்டதாகக் கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
முடுக்கிவிடப்பட்ட விதிமுறைகள்
அச்சம்பவத்தையடுத்து தங்கள் நாட்டின் விமானப் பணியாளர்கள் ‘கிரெளட்ஷிப்பிங்’கில் ஈடுபடுவதைத் தாய்லாந்து அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.கொண்டு செல்லப்படும் பெட்டிகள் தொடர்பில் மேலும் கடுமையான சோதனைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துமாறு அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய் ஏர்வேஸ் சிப்பந்தி கைது செய்யப்பட்டதையடுத்து தாய்லாந்தில் ‘கிரெளட்ஷிப்பிங்’ சேவையைப் பயன்படுத்துவோர் கூடுதல் விழிப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


