ரியாத் விமான நிலையத்தின்மீது மறுபடியும் தாக்குதல்; ஒருவர் கொல்லப்பட்டார்

ரியாத் விமான நிலையத்தின்மீது மறுபடியும் தாக்குதல்; ஒருவர் கொல்லப்பட்டார்

படம்: ராய்ட்டர்ஸ்

12 Oct 2026 - 10:12 am

2 mins read

ரியாத்: சவூதி அரேபியாவின் பிரதான விமான நிலையமான ரியாத் அனைத்துலக விமான நிலையம் மறுபடியும் ஹூதி கிளர்ச்சிப் படையின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) கிங் காலித் அனைத்துலக விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 11 பேர் காயமுற்றனர் என்று சவூதி சிவில் விமானத்துறை ஆணையம் தெரிவித்தது. கொல்லப்பட்டவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் அது குறிப்பிட்டது. தாக்குதலால் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் அது தற்போது ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முந்தைய நாள்தான் அவ்விமான நிலையத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் சவூதி அரேபியா முக்கிய நிகழ்ச்சிகளை ஏற்று நடத்தவிருக்கிறது. இந்தச் சூழலில் அது தாக்குதல்களுக்கு உள்ளாகிவருகிறது.

பொறுப்பேற்ற ஹூதி

தாக்குதலுக்கு ஹூதிப் படை விரைவிலேயே பொறுப்பேற்றுக்கொண்டது. வலுக்கட்டாயமாக ஆதிக்கம் செலுத்தும் நோக்குடன் சவூதி செயல்பட்டதற்குத் தாங்கள் பதிலடி தருவதாக அப்படை கூறியது.

ஏமனில் சவூதி தலைமையிலான கூட்டணி, ஈரான் ஆதரவுப் படையான ஹூதியுடன் சண்டையிட்டுவருகிறது. அந்தக் கூட்டணி, சம்பவ இடத்துக்கு அருகே ஓர் ஏவுகணையை ஆகாயத் தற்காப்புப் படைகள் முடக்கியதாகவும் தெரிவித்தது.

சவூதி அரேபியாவின் டமாம் நகரில் உள்ள கிங் ஃபாட் அனைத்துலக விமான நிலையத்துக்கு அருகே ஒரு ஏவுகணையும் விழுந்தது. அத்தாக்குதலுக்கும் ஹூதி பொறுப்பேற்றுக்கொண்டது.

மற்றொரு தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை கிங் ஃபாட் அனைத்துலக விமான நிலையத்தின்மீதான தாக்குதலை சவூதி சிவில் விமானத் துணை ஆணையம் உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதத்தைக் கணிக்கும் ஆய்வுகளும் பாதுகாப்புச் சோதனைகளும் நடத்தப்பட்டுவருவதாக ஆணையம் தெரிவித்தது.

டமாம் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பல விமானச் சேவைகள் தாமதமடைந்தன அல்லது ரத்து செய்யப்பட்டன என்று ஃபிளைட்ரேடார்24 இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள் இருவகை சேவைகளுக்கும் இது பொருந்தும்.

டாமாம் விமான நிலையம், சவூதி அரேபியாவின் மூன்றாவது ஆகப்பெரிய விமான நிலையமாகும்.

அந்நாட்டின் பெரும் எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோவின் இரண்டு நிலையங்களையும் தாங்கள் தாக்கியதாக அதன் ராணுவப் பேச்சாளர் ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சிவழி ஆற்றிய உரையில் தெரிவித்தார். இதுகுறித்து சவூதி தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், 25வது உலக பெட்ரோலியக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கண்டனம்

துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் ஹூதிப் படையின் தாக்குதல்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தாக்குதல்கள், நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத வகையில், பிரச்சினையை அபாயகரமான முறையில் மோசமாக்குவதாகும் என்று அவை எடுத்துரைத்தன.

குறிப்புச் சொற்கள்
உலகம்சவூதி அரேபியாஹூதிதாக்குதல்மரணம்உயிரிழப்புகாயம்