தீபாவளியை முன்னிட்டு டாக்சி & வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் நிதியுதவி

தீபாவளியை முன்னிட்டு டாக்சி & வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் நிதியுதவி

படம்: பெர்னாமா

22 Oct 2026 - 5:45 pm

2 mins read

சிரம்பான்: அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, டாக்சி, வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கு, மடானி அரசாங்கம் தலா 1,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவியை வழங்கியுள்ள நடவடிக்கை, நெகிரி செம்பிலானில் உள்ள 400க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், தீபாவளிப் பண்டிகைக்கான செலவுகள், தினசரி வாழ்க்கைச் செலவினங்களுக்கு அந்நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் கூறினார்.

“இந்தச் சிறு உதவி வாழ்க்கைச் சுமையைக் குறைக்க உதவும். நாங்கள் வாக்குறுதியளித்தபடி தீபாவளிக்கு முன்னதாக இந்த உதவியை வழங்க விரும்புகிறோம்,” என்றார் அவர். 

வியாழக்கிழமையன்று (அக்டோபர் 22) நெகிரி செம்பிலான், சிரம்பானில் நடைபெற்ற டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமைச்சர் அதனை தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக, நாடு முழுவதுமுள்ள தகுதிபெற்றவர்களுக்கு, வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டதாக பெர்னாமா தெரிவித்தது.

போக்குவரத்து அமைச்சு தனது உருமாற்றத் திட்டத்தின் மூலம் டாக்சி ஓட்டுநர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார். பொதுப் போக்குவரத்துத் துறையில் அவர்கள் மற்றவர்களுடன் போட்டியிடும் வகையில், புதிய வாகனங்களின் விலையைக் குறைக்க புரோட்டோன் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது, அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்க கடன் வசதிகள், கட்டணச் சலுகைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வாகனங்களுக்குள் விளம்பர இடங்களை வழங்குவதன் மூலமும், செயலிகளைப் பயன்படுத்தி ஓட்டுநர்களைப் பயணிகளுடன் இணைப்பதன் மூலமும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கிடையே, இத்துறையில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் டாக்சி ஓட்டுநர் எல். ஜகதீசன் (68), தமக்கு வழங்கப்பட்ட இந்த ஊக்கத்தொகை இதுவரை கிடைத்தவற்றிலேயே மிகப்பெரியது என்றும் இது தீபாவளிச் செலவுகளுக்குப் பெரிதும் உதவும் என்றும் தெரிவித்தார்.

போர்ட் டிக்சனில் 37 ஆண்டுகளாக டாக்சி ஓட்டுநராகப் பணியாற்றி வரும் எம். செல்வராஜு (66), டாக்சி ஓட்டுநர்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையைப் பாராட்டுவதாகவும் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
போக்குவரத்துநிதியுதவிடாக்சி