சரவாக் நீர்த் திட்டங்களுக்கு 7.4 பில்லியன் ரிங்கிட்: துணைப் பிரதமர் ஃபடில்லா

சரவாக் நீர்த் திட்டங்களுக்கு 7.4 பில்லியன் ரிங்கிட்: துணைப் பிரதமர் ஃபடில்லா

படம்: பெர்னாமா

24 Oct 2026 - 5:24 pm

2 mins read

சிபு: நீர்வளப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் பேரிடர் அபாயத்தைக் குறைக்கவும், 13வது மலேசியத் திட்டத்தின் முதல் தொடர் திட்டத்தின்கீழ், 46 நீர்த் திட்டங்களுக்காக சரவாக் மாநிலத்திற்கு 7.4 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்தத் திட்டங்களில் 33 தொடர் திட்டங்களும் 13 புதிய திட்டங்களும் அடங்கும் என்றும் மொத்த நிதியில் 5.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டங்களை நீர்ப்பாசன, வடிகால் துறை செயல்படுத்தும் என்றும் துணைப் பிரதமர் அமர் ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்றத்துறை அமைச்சருமான திரு ஃபடில்லா, நீர்ப்பாசன, வடிகால் துறையின் திட்டங்களில், வெள்ளத் தணிப்பு, நதிப் பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கும் என்று குறிப்பிட்டார்.

பத்தாங் ராஜாங் வடிநிலப் பகுதிக்கான ஒருங்கிணைந்த நதி வடிநில நிர்வகிப்பு ஆய்வை நீர்ப்பாசன, வடிகால் துறை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். அது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திரு ஃபடில்லா தெரிவித்தார்.

சரவாக்கில் அந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ள ஒன்பது நதி வடிநிலங்களில் அதுவும் ஒன்று.

அந்த ஆய்வின் முடிவுகள், ஆறுகளை மேலும் ஒருங்கிணைந்த, முறையான, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வழியில் நிர்வகிக்க சரவாக் மாநில அரசுக்கு உதவும் ஒரு செயல் திட்டத்தை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நீர்வளங்களைப் பாதுகாப்பதற்கும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கும் சமூக நலனையும் சுற்றுப்புற நிலைத்தன்மையையும் கருத்தில்கொள்வதை உறுதிசெய்வதற்கும் அந்த முயற்சி முக்கியம் என்று அவர் கூறினார்.

“இத்திட்டங்கள் வெற்றிபெற, அவற்றைச் செயல்படுத்தும் அமைப்புகள், சரவாக் அரசு, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அணுக்கமான ஒத்துழைப்பு தேவை,“ என்று அவர் வலியுறுத்தினார்.

தூய்மைக்கேடு குறித்துப் புகார் அளிப்பது, குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட வழிகளில், ஆறுகளைப் பாதுகாப்பதில் சமூகங்கள், தொழிற்துறைகள், அரசு சாரா அமைப்புகள், இளைய தலைமுறை ஆகியவை தங்களின் பங்கை ஆற்றுமாறு திரு ஃபடில்லா கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
சரவாக்நீர்திட்டம்