டிரம்ப்புக்கு ஆதரவாக மாறினார் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனி­யர்

1 mins read
1e66d0a5-7d25-4ef1-995a-a7d29983a888
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டோனல்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக இருந்த ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் மாறியுள்ளார். - படம்: இபிஏ

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக இருந்த ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டோனல்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக அரிசோனாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்துகொண்டார்.

தமது வாழ்க்கையின் பெரும்பகுதி ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக இருந்தவர் 70 வயது திரு கென்னடி.

இருப்பினும், கட்சியை விட்டு விலகத் தூண்டிய அதே கொள்கைகள்தாம், அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக மாறத் தம்மைத் தூண்டியதாகக் கூறினார்.

தேர்தலுக்கான 10 மாநிலங்களில் தமது பெயரை மீட்டுக்கொள்ள இருப்பதாக ஆகஸ்ட் 23ஆம் தேதி பீனிக்ஸ் அரிசோனாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

பேரணி மேடைக்கு திரு கென்னடியை வரவேற்ற டிரம்ப், அவரை ‘தனித்துவமிக்கவர்’ என்றும் ‘திறன்வாய்ந்தவர்’ என்றும் பாராட்டினார்.

இதற்கிடையே, கென்னடிக்கு வாக்களிப்பதாக இருந்த ஆதரவாளர்களைத் தம்வசம் ஈர்க்க முயற்சி செய்யவிருப்பதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

நவம்பர் தேர்தல் நெருங்குகையில் திரு கென்னடிக்கு ஆதரவாக இரட்டை இலக்கில் இருந்த கருத்துக்கணிப்பு சரிந்துவிட்டது. இதற்கு நிதியும் தேசிய அளவிலான பிரசாரமும் குறைந்ததே காரணங்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், டிரம்ப்புக்கு ஆதரவாக திரு கென்னடி மாறியுள்ளதால் அவரின் உறவினர்கள் சீற்றமடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்