இஸ்தான்புல்: காஸாவிலிருந்து ஆயிரம் பிள்ளைகளை வெளியேற்றி ரோமானியாவில் உள்ள மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சையளிக்கத் தயாராக இருப்பதாய் ரோமானிய அதிபர் நிக்குசோர் டான் கூறியுள்ளார்.
அத்துடன், குடியிருப்பாளர்களுக்குத் தேவையான முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்ப பங்களிக்கவும் தயார் என்றார் அவர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அமைதிக் குழுவின் முதல் சந்திப்புக்கு வாஷிங்டனில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ள நிலையில் திரு டான் அவ்வாறு சொன்னர்.
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த திரு டிரம்ப்புக்கும் அவரின் தலைமைத்துவத்துக்கும் நன்றி கூறியவாறு தொடக்க உரையை ஆற்றிய திரு டான், திரு டிரம்ப்பின் திட்டம் விரிவானது என்றும் நிலையானது என்றும் வருணித்தார்.
“அனைவரும் காஸாவில் அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவை நிலைபெறவேண்டும் என்று விரும்புகின்றனர்,” என்ற திரு டான், “எப்படி அதைச் செயல்படுத்துவது என்பதுதான் இப்போதைய கேள்வி என்றார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை ரோமானியாவில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டுவர காஸாவுக்குச் சென்றுவரும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தயார் என்றார் திரு டான்.
ரோமானியா ஏற்கெனவே அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்ற அவர், 4,000 குடும்ப உறுப்பினர்களுக்கு வரை உதவ முடியும் என்றார்.
அவசரக் கால உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்புச் சேவை ஆகியவற்றில் ரோமானியாவுக்குப் பழுத்த அனுபவம் இருக்கிறது என்பதைச் சுட்டிய திரு டான், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் கருவிகளையும் வழங்கி மறுகட்டமைப்பில் உதவ முடியும் என்று வாக்குறுதி அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாலஸ்தீன மாணவர்களுக்கு ஏற்கெனவே உபகாரச் சம்பளங்களை ரோமானியா வழங்கியிருப்பதையும் குறிப்பிட்ட திரு டான், அதைக் கூடுதல் மாணவர்களுக்கு விரிவுபடுத்த முடியும் என்றார்.
காவல்துறை, நீதித் துறை, அரசாங்க நிர்வாகம் போன்ற பல்வேறு முக்கிய அமைப்புகளை மறுபடியும் கட்டியெழுப்புவதிலும் ரோமானியாவுக்குத் திறமை உள்ளது என்றும் திரு டான் வலியுறுத்தினார்.

