நஜிப் வீட்டுக்காவலில் ரோஸ்மா வசிக்கத் தடை

நஜிப் வீட்டுக்காவலில் ரோஸ்மா வசிக்கத் தடை

படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2026 - 6:25 pm

2 mins read

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், எஞ்சியுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்கும்போது, அவருடன் அவருடைய மனைவி ரோஸ்மா, குடும்ப உறுப்பினர்கள், பிற தனிநபர்கள் ஆகியோர் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று அம்னோ மகளிர் உச்சமன்ற உறுப்பினர் நூருல்ஹிதாயா அகமது ஸாஹிட் தெரிவித்துள்ளார்.

‘ஹரியான் மெட்ரோ’ நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, நஜிப் தண்டனை அனுபவித்து வரும் தாமான் டூட்டாவில் உள்ள இல்லத்தில் தங்குவதற்குப் பதிலாக, அவரது மனைவி ரோஸ்மா மன்சூர் பெவிலியனில் உள்ள அவரது சொ இல்லத்தில் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டுக்காவல் உத்தரவு அமல்படுத்தப்படுவது குறித்து ‘திரெட்ஸ்’ தளத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திருவாட்டி நூருல்ஹிதாயா, தாமான் டூட்டா இல்லம் ஓர் அதிகாரபூர்வ சிறைச்சாலையாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே வழக்கமான சிறைச்சாலை விதிமுறைகளே அங்கும் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தினார்.

இணையம் வழி உணவுப் பொருள்களை வாங்குவதற்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அனைத்து உணவு, பானங்களும் சிறைத்துறை அதிகாரிகளாலேயே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சந்திப்பு நேரங்கள் அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டு, வழக்கமான சிறைச்சாலை நடைமுறைகளைப் போன்றே பின்பற்றப்படும் என்றும் திருவாட்டி நூருல்ஹிதாயா குறிப்பிட்டார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 10), நிபந்தனை மன்னிப்பு உத்தரவுக்கு ஏற்ப, உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்லாம் ஸைனுதீன் நவம்பர் 6ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட விடுதலை உத்தரவை ரத்து செய்தார். அதற்குப் பதிலாக, நஜிப்பை உடனடியாக காஜாங் சிறையிலிருந்து தாமான் டூட்டாவில் உள்ள அவரது இல்லத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்டெரியான் பெர்ஹாட் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நஜிப் தமக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத் தண்டனையை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 வரை வீட்டுக்காவலில் கழிக்க இந்த உத்தரவு வழிவகுக்கிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாநஜிப் ரசாக்சிறை