பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்துக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தமது எஞ்சிய சிறைத் தண்டனையிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்படவுள்ளார்.
இந்தத் தகவலைத் தாய்லாந்தின் நீதித்துறை அமைச்சர் ருத்தாபோன் நௌவாராட் புதன்கிழமையன்று (ஜூன் 3) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
15 ஆண்டுகாலச் சுய நாடுகடத்தலுக்குப் பிறகு 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திரு தக்சின் தாய்லாந்து திரும்பினார். 2001ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், உடல்நலக் குறைபாட்டைக் காரணம் காட்டி அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாய்லாந்து மன்னர் மன்னிப்பு வழங்கியதன் மூலம் அவரது தண்டனைக்காலம் ஓராண்டாகக் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த திரு தக்சின், கடந்த மே மாதம் நன்னடத்தையின் காரணமாகத் தண்டனைக்காலம் முடியும் முன்னரே தற்காலிகமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், ஏறத்தாழ மூன்று மாதங்களே எஞ்சியிருந்தன.
ஜூன் 3ஆம் தேதி தாய்லாந்து அரசியார் சுதிடாவின் பிறந்தநாளாகும். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகள் சிலருக்கு மன்னர் மகா வஜ்ரலோங்கோர்ன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார் என்று தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரச மன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் திரு தக்சினும் ஒருவர் என்பதை உறுதிப்படுத்திய நீதித்துறை அமைச்சர், முறைப்படியான நிர்வாக நடவடிக்கைகள் முடிந்தவுடன் அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டு, அவரது காலில் பொருத்தப்பட்டுள்ள மின்னணுக் கண்காணிப்பு வளையம் அகற்றப்படும் என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இதன் மூலம் 76 வயது பெருஞ்செல்வந்தரான திரு தக்சின், சிறைத் தண்டனையிலிருந்து முற்றிலும் விடுபடுகிறார்.

