தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முக்கிய மைல்கல்லை எட்டியது ‘ஆர்டிஎஸ்’ இணைப்புத் திட்டம்

2 mins read
a6729d79-021f-4237-b519-892f2e08ad0d
புக்கிட் சாகார் குடிநுழைவு, சுங்கச்சாவடி, தடைக்காப்பு வளாகக் கட்டமைப்புக்கான பணிகள் நிறைவுபெற்றதாக மலேசியாவின் ‘எம்ஆர்டி கார்ப்’ அறிவித்துள்ளது. - படம்: RTS Link JB-SG/ஃபேஸ்புக்

ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான ‘ஆர்டிஎஸ்’ விரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம் முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ரயில் பாதைத் திட்டத்தின்கீழ், புக்கிட் சாகார் குடிநுழைவு, சுங்கச்சாவடி, தடைக்காப்பு வளாகக் கட்டமைப்புக்கான (ICQC) பணிகள் திங்கட்கிழமை (ஜூலை 28) நிறைவுபெற்றதாக மலேசியாவின் ‘எம்ஆர்டி கார்ப்’ அறிவித்துள்ளது.

கட்டுமானப் பணிகள் நிறைவுபெறுவதைக் குறிக்கும் சடங்குபூர்வ நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ஸரிஃப் ஹஷிம் கூறினார்.

இந்தத் திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்வதைக் குறிக்கும் முக்கிய மைல்கல் இது என்று கூறிய அவர் அடுத்த கட்டமாக, கட்டட முகப்பு தொடர்பான பணிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றார்.

‘ஆர்டிஎஸ்’ இணைப்புத் திட்டத்தில் இந்த புக்கிட் சாகார் வளாகம் முக்கியமான பகுதி என்று குறிப்பிட்ட திரு முகமது ஸரிஃப், பயணிகள் இரு நாட்டுக் குடிநுழைவு, சுங்கச்சாவடி நடைமுறைகளையும் பூர்த்தி செய்வதற்கான வசதிகள் அதில் ஒருங்கே அமைந்திருக்கும் என்பதைச் சுட்டினார்.

தென்கிழக்காசியாவில் இத்தகைய முதல் வளாகமாக இது விளங்கும்.

திங்கட்கிழமை நடைபெற்ற சடங்குபூர்வ நிகழ்ச்சி, மலேசியத் தரப்பில் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனம், ஆலோசகர்கள், குத்தகைதாரர்களின் செயல்திறனை எடுத்துரைப்பதாகத் திரு முகமது ஸரிஃப் கூறினார்.

சிறப்பான தொழில்முறை நடத்தை, ஒருங்கிணைப்பு, உன்னதமான தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றுக்கான சான்று இது என்றார் அவர்.

இவ்வேளையில், புக்கிட் சாகார் ரயில் நிலையத்தின் கூரை முகப்பைப் பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ‘வாடி ஹனா’ பணிமனைக்கான மின்விநியோகம் கடந்த ஜூன் மாதம் தொடங்கிவிட்டதாகவும் அது திட்டமிட்டதற்கு இரு மாதங்கள் முன்பாகவே நடைபெற்றுள்ளதாகவும் திரு முகமது ஸரிஃப் தெரிவித்தார்.

இனி, பணிமனையிலிருந்து அனைத்து ரயில் நிலையங்களுக்குமான ரயில் போக்குவரத்துச் சோதனைதான் ‘ஆர்டிஎஸ்’ இணைப்புத் திட்டத்தின் அடுத்த மைல்கல்லாக அமையும் என்றார் அவர். திட்டத்தின் தயார்நிலையை உறுதிசெய்ய அது உதவும்.

‘ஆர்டிஎஸ்’ இணைப்புத் திட்டத்துக்கான பணிகள் 2026ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2027ஆம் ஆண்டு மலேசியாவின் புக்கிட் சாகார் நிலையத்துக்கும் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்துக்கும் இடையே அது சேவை வழங்கத் தொடங்கும்.

ஒவ்வொரு திசையிலும் மணிக்கு 10,000 பேர் அதில் பயணம் செய்யலாம். அன்றாடம் ஏறக்குறைய 40,000 பேர் அந்த விரைவு ரயில் சேவையைப் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்