மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் இடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்துப் பேசினார்.
செப்டம்பர் மாதத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். அப்பயணத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவும் முக்கியக் கருத்து வேறுபாடுகளைச் சரியாக நிர்வகிக்க வேண்டும் என்று அமைச்சர் ரூபியோ சுட்டிக்காட்டினார். மோதல்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா சீனாவின் முக்கிய நலன்களை மதிக்க வேண்டும் என்று அமைச்சர் வாங் யீ வலியுறுத்தினார். சீனாவின் நியாயமான கவலைகளுக்குத் தகுந்த தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பு மிகவும் நடைமுறைச் சாத்தியமானதாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்ததாகச் சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான் போர் தீவிரமடைந்து வரும் வேளையிலும், தென்சீனக் கடலில் பிலிப்பீன்ஸ் மற்றும் சீனா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலிலும் இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தென்சீனக் கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தைக் குறைத்து, அமைதியையும் நிலைத்தன்மையையும் பேண அனைத்து வட்டார நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என திரு வாங் யீ கேட்டுக்கொண்டார்.
அதேவேளையில், ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் மத்திய கிழக்குச் சூழல் குறித்து தீவிரக் கவலை தெரிவித்தனர். அனைத்துலகக் கப்பல் போக்குவரத்து மற்றும் பொருளியல் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது மிகவும் முக்கியம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திரு ரூபியோ சுட்டிக்காட்டினார். வர்த்தகம், தைவான் விவகாரம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புத் துறைகள் குறித்தும் இரு தலைவர்களும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

