எனக்கு உடல்நலக் குறைவு எனக் கூறும் செய்திகள் உண்மையல்ல: டிரம்ப்

2 mins read
a8340077-9100-4d9c-9ddf-c5e36267f439
வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) பேசும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: இபிஏ

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வலம் வந்த செய்திகள் உண்மையல்ல என செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) தெளிவுபடுத்தினார்.

தொழிலாளர் தின வாரயிறுதியில், ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதிலும் தமது வெர்ஜினியா கோல்ஃப் கிளப்பிற்கு செல்வதிலும் தாம் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததாக அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளைப் பற்றி தமக்குத் தெரியுமா என்று கேட்டதற்கு, அவர் அதை ‘போலிச் செய்திகள்’ எனக் கூறினார்.

திரு டிரம்ப்பின் கணுக்கால்கள் வீங்கியதையும் வலது கையில் ஒப்பனை இருப்பதையும் காட்டும் புகைப்படங்கள் வெளியான நிலையில், அவருக்குக் கால்களில் வீக்கமும் வலது கையில் சிராய்ப்புக் காயமும் ஏற்பட்டதாக ஜூலை 17ஆம் தேதி வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்திருந்தார்.

வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட டிரம்ப்பின் மருத்துவர் ஷான் பார்பபெல்லாவின் கடிதத்தில், கால்களில் உள்ள நரம்புகள் இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லத் தவறுவதால் காலில் பிரச்சினை ஏற்பட்டதை மருத்துவச் சோதனைகள் உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, 70 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் பொதுவாகக் காணப்படும் ஒரு சாதாரண நிலையாகும்.

டிரம்ப்பின் கையில் உள்ள காயங்கள், அடிக்கடி கைகுலுக்குவதாலும் ‘ஆஸ்பிரின்’ பயன்படுத்துவதாலும் ஏற்படும் சிறு மென்மையான திசுக்களின் எரிச்சலுடன் ஒத்திருப்பதாக மருத்துவர் கூறினார்.

டிரம்ப் தமது ‘வழக்கமான இதய நோய்த் தடுப்பு திட்டத்தின்’ ஒரு பகுதியாக ஆஸ்பிரின் எடுத்துக்கொள்கிறார்.

அதன் பிறகு, டிரம்ப்பின் உடல்நிலை குறித்த கவலைகளை வெள்ளை மாளிகை குறைத்து மதிப்பிட்டுள்ளது.

அவரின் கால் பிரச்சினையை அவர் லேசாக எடுத்துக்கொள்வதாகக் கூறிய வெள்ளை மாளிகை, அதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை விவரிக்கவில்லை.

இவ்வாண்டு ஜனவரியில் அமெரிக்காவின் 47வது அதிபராகப் பொறுப்பேற்ற திரு டிரம்ப்தான் அமெரிக்க அதிபர் வரலாற்றில் ஆக வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் பதவியை ஏற்றபோது அவரது வயது 78.

கடந்த வாரயிறுதியில், எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் அவரது உடல்நிலை குறித்து ஊகங்கள் பரவின.

குறிப்புச் சொற்கள்