மாஸ்கோ: ரஷ்யாவும் சீனாவும் ஜப்பானியக் கடலில் அவற்றின் கூட்டுக் கடற்படை பயிற்சிகளை முடித்துக்கொண்டுள்ளன.
அந்த இரு நட்பு நாடுகளும் அவற்றுக்கு இடையிலான ராணுவ உறவுகளை வலுப்படுத்த எண்ணுகின்றன.
ஜப்பானியக் கடல், தென்கொரியாவில் கிழக்குக் கடல் என்று அழைக்கப்படுகிறது.
ரஷ்யா 2022ஆம் ஆண்டில் உக்ரேனுக்கு எதிராக அதன் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவும் சீனாவும் ராணுவ வட்டத்தில் மேலும் அணுக்கமாகி உள்ளன. அந்தத் தாக்குதலுக்கு சீனா கண்டனம் தெரிவிக்கவில்லை.
வியாழக்கிழமை தொடங்கிய அண்மையப் பயிற்சிகளின் முக்கியக் குறிக்கோள் இரு நாட்டுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகும் என்று ரஷ்ய தற்காப்பு அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது. அதோடு ஆசிய பசிஃபிக் வட்டாரத்தில் நிலைத்தன்மையையும் அமைதியையும் கட்டிக்காப்பதும் நோக்கம் என்றது அமைச்சு.
ஏறத்தாழ இருபது போர்ப் பயிற்சிகள் நடத்தப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்தது.
ரஷ்யாவும் சீனாவும் ஒருங்கிணைப்பை அதிகரிக்க, அண்மைய மாதங்களாக அவற்றின் ராணுவங்களுக்கு இடையே சில பயிற்சிகளை நடத்திவந்துள்ளன.

