ஐநா தொலைத்தொடர்பு அமைப்பில் பதவி வகிக்க ர‌ஷ்யா முயற்சி

ஐநா தொலைத்தொடர்பு அமைப்பில் பதவி வகிக்க ர‌ஷ்யா முயற்சி

படம்: ஏஎஃப்பி

16 Nov 2026 - 8:23 pm

2 mins read

ஜெனிவா: ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தொலைத்தொடர்புகள் அமைப்பில் மூத்த நிர்வாகிகளுக்கான பதவியை வெல்ல ர‌ஷ்யா நம்பிக்கை கொண்டுள்ளது.

உக்ரேன்மீது போர் தொடுத்ததை அடுத்து அனைத்துலக நாடுகள் ர‌ஷ்யாவைத் தனிமைப்படுத்தியுள்ளன. அந்த நிலையை மாற்றவும் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தில் கூடுதல் ஆதிக்கம் செலுத்தவும் ர‌ஷ்யா முயல்வதாகப் பேராளர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் ர‌ஷ்யாவை வெளிப்படையாக எதிர்ப்பதற்கான சாத்தியங்கள் குறைந்துவருவதாகக் கூறிய அவர்கள், உக்ரேன் போர் நீடிக்கும் வேளையில் ர‌ஷ்யாவுடனான வர்த்தக, பாதுகாப்பு உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ள ஒருசில நாடுகள் தொடங்கிவிட்டதைச் சுட்டினர்.

இதற்கிடையே, அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தில் இரண்டு மூத்த நிர்வாகிகளுக்கான பதவிகளை ர‌ஷ்யா வகிக்க முற்படுகிறது.

கத்தார் தலைநகர் டோஹாவில் ஒன்றியத்தில் உள்ள பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. ஒன்றியத்தைச் சேர்ந்த 194 உறுப்பினர்கள் யார் எந்தப் பதவியை வகிப்பர் என்பதை முடிவுசெய்வர்.

உலகச் சுகாதார நிறுவனத்தில் கடந்த ஆண்டு தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் ர‌ஷ்யா தோல்வி கண்டது.

ஜெனிவாவை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகள் மன்றத்திற்குத் திரும்புவதற்கும் 2023ஆம் ஆண்டும் ர‌ஷ்யா போதுமான வாக்குகளைப் பெறவில்லை.

ஆனால், ர‌ஷ்யாவுடனான வர்த்தகத்தையும் பாதுகாப்பு உறவுகளையும் ஒருசில நாடுகள் தற்போது உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவதால் தற்போதைய தேர்தலில் ர‌ஷ்யா மூத்த நிர்வாகிக்குரிய பதவிகளை வகிப்பதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

மாறாக, ஜெனிவாவில் உள்ள உக்ரேனுக்கான ஐக்கிய நாட்டுத் தூதர், ர‌ஷ்யாவின் தாக்குதல்களால் தமது நாட்டில் உள்ள தொலைத்தொடர்புகளுக்கு ஏற்பட்ட சேதம் கிட்டத்தட்ட $2.5 பில்லியனுக்கும் அதிகம் என்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் ர‌ஷ்யாவுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படக்கூடாது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்