30% கரடிகளைக் கொல்ல ர‌‌ஷ்யா திட்டம்

30% கரடிகளைக் கொல்ல ர‌‌ஷ்யா திட்டம்

படம்: ஏஎஃப்பி

14 Nov 2026 - 3:53 pm

1 mins read

மாஸ்கோ: ர‌ஷ்யாவில் பழுப்பு நிறக் கரடிகளின் தாக்குதல்களால் இவ்வாண்டில் இதுவரை 36 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவர 30 விழுக்காடு கரடிகளைக் கொல்ல அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

அத்தகவலை ர‌‌ஷ்ய இயற்கைவள அமைச்சு வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) வெளியிட்டதாக அந்நாட்டு அரசாங்கச் செய்தி நிறுவனமான ரியா குறிப்பிட்டது.

கரடிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் தாக்குதல்களைக் குறைக்கவும் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டு, ரஷ்ய நீதி அமைச்சில் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுத் தொடங்கியதிலிருந்து பழுப்பு நிறக் கரடிகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது குறித்து 12,000க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.

பதிவான 87 தாக்குதல் சம்பவங்களில் 36 பேர் மாண்டனர். ர‌ஷ்யாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள விடுமுறை முகாம் ஒன்றின் காவலர் கரடிகளால் கொல்லப்பட்டதை அடுத்து,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடியது.

இந்நிலையில், பழைய வரம்புகள் நீக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டாரத்திலும் அதிகபட்சமாக 30 விழுக்காட்டுக் கரடிகளைக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் 308,000 கரடிகள் உள்ள நிலையில், கம்சட்காவில் 14 விழுக்காடு, மேற்கு சைபீரியாவின் கிராஸ்நோயார்ஸ்க் வட்டாரத்தில் 19 விழுக்காடு என வட்டாரத்திற்கு ஏற்ப வரம்புகள் மாறுபடும்.

எனினும், அந்த உத்தரவு எப்போது அமலுக்கு வரும் அல்லது எவ்வளவு காலம் நடைமுறையில் இருக்கும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்