மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உக்ரேனியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் நடைபெறும் பேச்சுவார்த்தை சரியான பாதையில் செல்லக்கூடும் என்று சனிக்கிழமை (ஏப்ரல் 12) கூறியுள்ளார்.
இருந்தபோதும் ஒரு கட்டத்தில் அவர்கள் சொன்னதைச் செய்ய வேண்டும் அல்லது சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
ரஷ்யாவைக் கடிந்துகொண்டதுடன் ஒப்பந்தத்தை எட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்திய மறுநாள் திரு டிரம்ப் அதிபரின் தனிப்பட்ட விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
பேச்சுவார்த்தையின் முடிவுகள் விரைவில் தெரியவரும் என்றார் அவர். என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறிய திரு டிரம்ப் அது சரியானதாகவே அமையும் என்று தாம் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
அமைதி ஒப்பந்தம் தொடர்பில் திரு டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப், ஏப்ரல் 11ஆம் தேதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சு நடத்தினார்.
அமெரிக்க அதிபர் பொறுமை இழப்பதைக் காட்டும் அறிகுறிகள் தென்படும் வேளையில் ரஷ்யா அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாகத் தெரிந்தால், அதனிடம் எரிபொருள் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
முன்னதாகச் சனிக்கிழமை திரு டிரம்ப்பைப் பாராட்டிப் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ், வேறெந்த மேற்கத்தியத் தலைவரும் திரு டிரம்ப் அளவிற்கு உக்ரேனியச் சர்ச்சையைப் புரிந்துகொள்ளவில்லை என்றார்.
“உக்ரேனியச் சர்ச்சை உட்பட எந்தவொரு சர்ச்சைக்கும் மூல காரணத்தை வேரறுப்பது முக்கியம். பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் நீடித்த அமைதியை நிலைநாட்டவும் இதுதான் ஒரே வழி,” என்று துருக்கியில் நடைபெற்ற அன்டால்யா அரசதந்திரக் கருத்தரங்கில் திரு லாவ்ரோவ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
உக்ரேன் நேட்டோ கூட்டணியில் சேர விரும்புவதுதான் இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணம் என்றார் அவர்.