சுமி: உக்ரேன் மீது ஞாயிற்றுக்கிழமை (ஊப்ரல் 13) ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல், கடந்த சில மாதங்களாகக் காணப்படாத ஆக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.
அதற்கு எதிராக உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்தத் தாக்குதல் மோசமானது என்றும் அது ஒரு தவறு என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
ரஷ்ய எல்லைக்கு அருகே வடகிழக்க உக்ரேனின் சுமி நகரை ஞாயிற்றுக்கிழமை காலை இரு ஏவுகணைகள் தாக்கின. குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் அலுவலகப் பிரதிநிதியான ஸ்டீவ் விட்கோஃப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்திக்க ரஷ்யா சென்றிருந்தார். மூவாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர திரு டிரம்ப் முயற்சி எடுத்து வருகிறார்; அதற்கு இணங்குமாறு திரு புட்டினைக் கேட்டுக்கொள்ள அந்தச் சந்திப்பு நடந்தது.
சந்திப்புக்கு இரு நாள்கள் கழித்து சுமி நகர் மீதான தாக்குதல் நடந்தது.
“மிகவும் மோசமானது. தவறு நடந்ததாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், அது மிக மோசமாகச் சம்பவம்தான். இந்தப் போரே கொடூரமானது,” என்று திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்வதற்கான அந்நாட்டு ஆகாயப் படை விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தவறு நடந்தது என்று தாம் கூறியதை விளக்குமாறு திரு டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “தவறு இழைத்தது அவர்கள்தான். அவர்களிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்,” என்று யாரையும் குறிப்பிடாமல் சொன்னார்.
ரஷ்யப் படையெடுப்பால் ஏற்பட்டுள்ள கொடூரத்தை மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளத் தமது நாட்டுக்கு வருமாறு உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, திரு டிரம்ப்பைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு எவ்விதப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் முன்பு கொல்லப்பட்ட மக்கள், பொதுமக்கள், வீரர்கள், சிறுவர்கள் ஆகியோரையும் அழிந்துபோன மருத்துவமனைகள், தேவாலயங்கள் ஆகியவற்றையும் நேரில் வந்து பாருங்கள்,” என்று திரு ஸெலென்ஸ்கி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டதாக சிபிஎஸ் ஊடகம் தெரிவித்தது.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் தனக்கு அதிர்ச்சி தந்துள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறினார். ரஷ்யாவின் இச்செயல் கோழைத்தனமானது என்று இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சாடினார்.