மாஸ்கோ: ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் செப்டம்பர் 18 முதல் 20ஆம் தேதி வரை, மூன்று நாள்களுக்கு வாக்களிப்பு நடைபெறுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள வாக்குப்பதிவு முறைகளையும் தொலைத்தொடர்புச் சேவைகளையும் குறிவைத்துப் பல்வேறு இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் மாஸ்கோவில் இணைய வாக்களிப்பு முறைமீது இரவு நேரத்தில் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் எலா பாம்ஃபிலோவா சனிக்கிழமை (செப்டம்பர் 19) தெரிவித்தார். நிலைமை முழுக் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் தொடரும் தாக்குதல்களை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, நாட்டின் கிழக்குப் பகுதியில் தொலைத்தொடர்பு இணைப்புகளை முடக்கும் முயற்சியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ரஷ்யாவின் மின்னிலக்க அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு, சேவைகள் அனைத்தும் உடனடியாகச் சீரமைக்கப்பட்டதாக அரசாங்கச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இத்தேர்தலில் உக்ரேன் தலையிட முயல்வதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சாடியிருந்தார். ஆனால், அதற்கான ஆதாரம் எதையும் அவர் வெளியிடவில்லை. தேர்தல் வெற்றியைத் திரு புட்டினின் கொள்கைகளுக்கான பரவலான ஆதரவாக ரஷ்ய அதிபர் மாளிகை சுட்டிக்காட்டும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஐந்தாம் ஆண்டாகத் தொடரும் உக்ரேனியப் போர் தொடர்பான அதிபரின் கொள்கைக்கான ஆதரவாக அது கருதப்படக்கூடும். போரை எதிர்த்த வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.
