ஜப்பானிய, தென்கொரிய,தைவான் எல்லைக்குள் ஊடுருவிய ரஷ்ய விமானங்கள்

ஜப்பானிய, தென்கொரிய,தைவான் எல்லைக்குள் ஊடுருவிய ரஷ்ய விமானங்கள்

படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2026 - 3:50 pm

3 mins read

தோக்கியோ: முன்னறிவிப்பின்றி தமது வான் எல்லைக்குள் இரண்டு ரஷ்ய விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக ஜப்பான் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜப்பான் அந்தச் சம்பவம் குறித்த மிகக் கடுமையான கண்டனத்தை ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அதிகாரபூர்வமாகப் பதிவுசெய்துள்ளது.

ஜப்பானின் தென்மேற்கில் ஃபுகுஓகா பகுதியில், ஒகினோஷிமா நகருக்கு அருகில் அதன் வான்வெளியில் அந்த விமானங்கள் அன்றைய தினம் சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு பிறகு நுழைந்ததாக அது விளக்கியது.

ஜப்பானின் தற்காப்புப் படைகள் உடனடியாக அதன் போர் விமானங்களை எல்லைக்குள் நுழைந்தோருக்கு எச்சரிக்கை விடுக்க அனுப்பி வைத்தது என்று அந்நாட்டு அரசாங்கத்தின் உயர் அதிகாரி மினொரு கிஹாரா தெரிவித்தார்.

“எங்களது வான் எல்லைகளை அத்துமீறிய ரஷ்ய விமானங்களின் செயல் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது மட்டுமல்ல பாதுகாப்புக்கும் மிரட்டலானது, அதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று அவர் கடிந்துகொண்டார்.

“அரசதந்திர முறையில் கடுமையான கண்டனத்தை ரஷ்யாவிடம் பதிவுசெய்ததோடு மீண்டும் அது நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று மிகத் தீவிரக் கோரிக்கையை முன்வைத்துள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய வாரங்களில் ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் உறவுகள் கசப்பாகிவிட்டன. ஜப்பானிய செய்தியாளரை உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டி, ரஷ்யா கைது செய்ததும், ஜப்பானின் புகையிலை நிறுவனம் ரஷ்யாவில் வைத்திருந்த சொத்துகள் முடக்கப்பட்டதும் முக்கியக் காரணங்கள் என்று கருதப்படுகின்றன.

இதற்கிடையே, கொரிய தீபகற்பத்தில் நடந்த போருக்குப் பிறகு 1951ல் அமெரிக்கா உருவாக்கிய வடகொரியாவுடனான வான் தற்காப்பு எல்லைக்குள் ரஷ்யாவின் பல ராணுவ விமானங்கள் ஊடுருவியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அதுவும் செவ்வாய்க்கிழமை நடந்ததாகத் தெரிகிறது.

கணக்கிடப்படாத அளவு ரஷ்ய விமானங்கள் ‘கொரிய வான் தற்காப்பு அடையாள மண்டல’த்துக்குள் அன்றைய தினம் அதிகாலை நுழைந்ததை தென்கொரியாவின் கூட்டு ராணுவப் படைகளின் தலைவர் குறிப்பிட்டார். ‘ஜப்பான் கடல்’ எனவும் அழைக்கப்படும் அவ்விடம் தென்கொரியாவின் கிழக்குக் கடற்பகுதியில் உள்ளது.

“ரஷ்ய விமானங்கள் அந்தத் தற்காப்பு எல்லையை அடைவதற்கு முன்பாகவே எங்களது ராணுவம் அவற்றை அடையாளம் கண்டன. எவ்விதச் சூழலையும் கையாள உடனடியாக ஆகாயப் படையின் போர் விமானங்கள் தயார்படுத்தப்பட்டன,” என்று ஓர் அறிக்கையில் அவர் விளக்கமளித்தார்.

வான் தற்காப்பு எல்லை என்பது எந்த நாட்டின் இறையாண்மைக்கும் உட்பட்ட இடம் அல்ல. ஆயினும் எல்லையில் இருக்கும் நாடுகளின் விமானங்கள் அவற்றுள் நுழையும்போது பாதுகாப்புக் கருதி ஒருவருக்கொருவர் அவற்றை அடையாளப்படுத்திக்கொள்ள பயன்படும் பகுதியாகவே அது கருதப்படும்.

ராணுவ விமானங்கள் அவ்வாறு அமைக்கப்பட்ட எல்லைகளுக்குள் நுழையும்போது சம்பந்தப்பட்ட நாடுகளிடம் தெரிவிப்பது எதிர்பார்க்கப்பட்டாலும் அது சட்டப்படி கட்டாயம் அல்ல.

தென்கொரிய வான் எல்லைக்குள் ரஷ்ய விமானங்கள் நேரடியாக ஊடுருவவில்லை என்று தென்கொரிய உறுதிப்படுத்தியது.

இதேபோன்ற குற்றச்சாட்டை தைவானும் பதிவுசெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு ரஷ்ய விமானங்கள் அத்தீவின் வடகிழக்குப் பகுதி வழியாக ‘ஆகாய தற்காப்பு அடையாள மண்டல’த்துக்குள் நுழைந்தது கண்டறியப்பட்டது அன்று அது கூறியுள்ளது.

தைவானின் கிழக்குத் திசை வரை அவ்விமானங்கள் பறந்ததோடு அங்குள்ள கிழக்குப் பகுதியான தைதுங் மாநிலத்தின் தென்திசை வழியாக வெளியேறிவிட்டதை அந்நாட்டு தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

ஆயுதப் படைகளின் கூட்டுக் கண்காணிப்பு, வேவுத் திறன் போன்றவற்றைக்கொண்டு ரஷ்ய விமானங்களின் நடவடிக்கைக்குத் தக்க எதிர் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு கூறியது. மேல் விவரங்களை அது வழங்கவில்லை.

குறிப்புச் சொற்கள்
தென்கொரியாவடகொரியாஅமெரிக்காஜப்பான்ரஷ்யாஎல்லைஆகாயத் துறைஆகாயப்படைபோர் விமானம்தற்காப்புபாதுகாப்புஊடுருவல்