ஆங்கரேஜ்: அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் சென்ற வாரம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இடையிலான உச்சநிலைச் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, அந்நகரைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு அதிபர் புட்டின் மோட்டார்சைக்கிள் ஒன்றைப் பரிசளித்ததாக ரஷ்ய அரசு ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள ரஷ்யத் தூதரகத்தில் பணியாற்றும் ஆண்ட்ரே லெடனேவ் என்பவர், ரஷ்யப் பேராளர் குழு தங்கியிருந்த ஆங்கரேஜ் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் மார்க் வாரன் என்பவரிடம் புதிய ‘யூரல்’ மோட்டார்சைக்கிளுக்கான சாவியை ஒப்படைத்தார்.
“ரஷ்ய அதிபரின் தனிப்பட்ட அன்பளிப்பு இது,” என்று வாரனிடம் லெடனேவ் கூறினார்.
“சொல்ல வார்த்தைகளே இல்லை. இது அற்புதமாக உள்ளது. மிக்க நன்றி,” என்றார் வாரன்.
“என்னிடம் பழைய மோட்டார்சைக்கிள் இருக்கிறது. ஆனால், அதனைவிட இது மேம்பட்டதாக உள்ளது,” என்றும் அவர் சொன்னார்.
உச்சநிலைச் சந்திப்பிற்குமுன் ஆங்கரேஜ் சாலையில் செய்தியாளர்கள் தற்செயலாக வாரனைச் சந்தித்ததாக ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி ஒளிவழி 1 தெரிவித்தது.
அப்போது, தன்னிடமுள்ள மோட்டார்சைக்கிளின் தயாரிப்பு ஆலை உக்ரேனில் உள்ளதால் அதற்கான உதிரி பாகங்களைப் பெறுவது சிரமமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு, டிரம்ப்-புட்டின் இடையிலான பேச்சுவார்த்தை நல்லபடியாக அமைந்து, சண்டை முடிவிற்கு வந்தால், அவருக்கு நல்லதுதானே என்று செய்தியாளர் கேட்டதற்கு, “ஆம், அப்படி நடந்தால் நல்லது,” என்று வாரன் பதிலளித்தார்.
யூரல் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ளது. அதனுடைய மோட்டார்சைக்கிள்கள் அனைத்தும் கஸக்ஸ்தானில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
ரஷ்யா-உக்ரேன் இடையே போர் தொடங்கியதும் ரஷ்யாவில் தனது தயாரிப்புப் பணிகளை யூரல் நிறுவனம் முற்றிலுமாக நிறுத்திக்கொண்டது.

