சோல்: அதிபர் யூன் சுக் இயோலைக் கைது செய்யும் விவகாரம் ‘ரத்தக்களறி’யாக இருக்கக்கூடாது என்று தென்கொரிய அதிபர் மாளிகை தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்து உள்ளார்.
அதிபர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ள திரு யூன், டிசம்பர் 3ஆம் தேதி திடீரென்று ராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
ஆறு மணி நேரத்தில் அந்தச் சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டாலும் அந்த அறிவிப்பின் மூலம் நாட்டில் வன்முறையைத் தூண்ட முயன்றதாக திரு யூனுக்கு எதிராக விசாரணை நடத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
விசாரணைக்கு வராததால் திரு யூனைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதிகாரிகள் அவரைக் கைது செய்யச் சென்றபோது அதிபர் மாளிகை பாதுகாப்புப் படையினர் அதற்கு அனுமதிக்கவில்லை.
மேலும், திரு யூனின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அதிபர் மாளிகையைச் சுற்றி நின்றிருந்தனர்.
இந்நிலையில், அதிபர் மாளிகைத் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பார்க் சோங்-ஜுன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) விசாரணைக்காக கொரிய தேசிய காவல்துறை அலுவலகத்துக்குச் சென்றார்.
அதிகாரிகள் அவரிடம் விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசாங்க அமைப்புகளுக்கு இடையிலான முரண்பட்ட போக்கு காரணமாக எழுந்துள்ள தற்போதைய நிலவரம் குறித்து பொதுமக்களில் பலர் கவலையுடன் உள்ளனர்,” என்றார்.
மேலும் அவர், “இந்த விவகாரத்தில் நேரடி கைகலப்போ ரத்தக்களறியோ இடம்பெறும் வகையில் சூழ்நிலை அமையாது என்று நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
திரு யூனைக் கைது செய்ய முதலில் பிறப்பிக்கப்பட்ட ஆணை ஜனவரி 6ஆம் தேதி காலாவதி ஆகிவிட்டது. அதனால், புதிய கைது ஆணையை விசாரணை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, “ஒன்று திரு யூனைக் கைது செய்யுங்கள், இல்லையெனில் அவருக்கு எதிரான பதவிநீக்கத்தை ரத்து செய்யுங்கள்,” என்று எதிர்த்தரப்புப் போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.