சாபா மின்சாரக் கட்டமைப்புத் திட்டம் கிராமங்களையும் மேம்படுத்தும்: அன்வார்

சாபா மின்சாரக் கட்டமைப்புத் திட்டம் கிராமங்களையும் மேம்படுத்தும்: அன்வார்

2 mins read
40661bb5-75be-402f-ae58-6a501c538501
சாபா மற்றும் சரவாக்கிற்கான பெரிய அளவிலான வளர்ச்சி நிதி ஒதுக்கீடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பதிலளித்தார். - படம்: ஷின்மின்

சிபிடாங்: மலேசியாவின் சாபா மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் சென்றடைவதை உறுதி செய்வதில் மலேசியக் கூட்டரசு அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

சாபா தென்மண்டல மதானி இணைப்பின் மின்சாரக் கட்டமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் அன்வார், நாட்டின் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட பெருநகரங்களை மட்டும் சார்ந்திராமல் தொலைதூரக் கிராமப் பகுதிகளையும் உள்ளடக்கிய சமச்சீரான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நோக்கம் என்று கூறினார்.

சாபா முதல்வர் ஹாஜிஜி நூர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், சாபா மற்றும் சரவாக்கிற்கான பெரிய அளவிலான வளர்ச்சி நிதி ஒதுக்கீடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் விமர்சனங்களுக்குப் பிரதமர் அன்வார் பதிலளித்தார்.

இரு மாநிலங்களின் உள்கட்டமைப்பு இடைவெளியைக் குறைப்பதற்கான இத்தகைய செலவினங்களை அரசாங்கம் தொடர்ந்து பாதுகாத்து ஆதரிக்கும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

இத்திட்டத்தின்கீழ் சாபாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் 275 கிலோவோல்ட் மின்சாரக் கடத்துத்தடம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தின் மின்கட்டமைப்பு வலுப்பெற்று மின்விநியோகம் சீராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்த 198 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டம், 2028ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 17 விழுக்காட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள வேளையில், அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குள் சென்று மக்களின் நலனுக்காகப் பணியாற்றும் தொழிலாளர்களின் தியாகத்துக்குப் பிரதமர் தமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்