கோத்தா கினபாலு: சாபா மாநிலச் சட்டமன்றம் அடுத்த வாரம் கலைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. மாநில முதலமைச்சர் ஹஜிஜி நூர் திங்கட்கிழமை (அக்டோபர் 6) அதனை அறிவிக்கக்கூடும் என்று தி ஸ்டார் ஊடகம் தெரிவித்தது.
புதன்கிழமை (அக்டோபர் 1) அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மாநிலத்தின் அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் பிரியாவிடை அளித்துக்கொண்டதாகவும் நிழற்படங்களை எடுத்துக்கொண்டதாகவும் ஊடகம் கூறியது.
ஆளும் கபுங்கான் ரக்யாட் சாபா (GRS) கூட்டணியிலிருந்து சாபா ஸ்டார் கட்சியும் சாபா முன்னேற்றக் கட்சியும் வெளியேறியதால் அறிவிப்புத் தாமதம் அடைந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
ஜிஆர்எஸ்-பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை வழிநடத்தும் திரு ஹஜிஜி சட்டமன்றத்தைக் கலைக்க ஏற்கெனவே மாநில ஆளுநர் மூசா அமானின் ஒப்புதலை நாடியிருப்பதாக மூத்த அரசியல்வாதி ஒருவர் குறிப்பிட்டார். 17வது முறையாக மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு அது வழிவிட்டுள்ளது.
சாபா சட்டமன்ற நாயகர் கட்ஸிம் யாஹ்யா, தற்போதைய சட்டமன்றத்தின் தவணைக்காலம் அடுத்த மாதம் (நவம்பர் 2025) 11ஆம் தேதி முடிவுறும் என்று இதற்கு முன்னர் கூறியிருந்தார். 16ஆம் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தை ஆளுநர் 2020 நவம்பர் 12 அன்று தொடங்கிவைத்தார்.
இருப்பினும் 2020 செப்டம்பரில் நடைபெற்ற திடீர்த் தேர்தலைத் தொடர்ந்து மன்ற உறுப்பினர்களின் பதவியேற்புச் சடங்கிற்காக அந்த ஆண்டு அக்டோபர் 9 அன்று சிறப்புக் கூட்டமொன்று நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை முதல் கூட்டமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார் திரு கட்ஸிம். அதுகுறித்த மாநில அரசமைப்புச் சட்டம் தெளிவாக இல்லை என்று கவனிப்பாளர்கள் சிலர் கருதுகின்றனர்.
சாபா சட்டமன்ற விவகாரம் குறித்துச் சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. பல கருத்துகள் பகிரப்படுகின்றன. சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான செய்தியாளர் கூட்டம் பற்றிச் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் ஹஜிஜியின் ஊடக அலுவலகம் தெரிவித்தது.