கோத்தா கினபாலு: சாபாவில் உள்ள தவாவ் விமான நிலையத்தில் வெடிகுண்டு குறித்து நகைச்சுவையாகப் பேசியதற்காக சாபா ஆடவருக்கு 360 மணி நேர சமூகப் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 21ஆம் தேதி லாரி ஓட்டுநரான சப்ரி நுல்சாரி தாம் நகைச்சுவையாக பேசி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதை ஒப்புக் கொண்டார். ஜூலை 15ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு விமான நிலையத்தின் புறப்பாடு மண்டபத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
சபரி, தினமும் நான்கு மணி நேரம் சமூகப் பணிகளை மூன்று மாதங்களுக்குச் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர், பெண் பயணியின் உடைமைகளைச் சோதித்துக் கொண்டிருந்தபோது வெடிகுண்டாக இருக்கலாம் என்று சப்ரி தெரிவித்தார்.
அங்கிருந்த பலர் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். உடனே அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சந்தேகமான பொருள்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
சப்ரி, குற்றவியல் சட்டப் பிரிவு 505(பி) கீழ் குற்றம்சாட்டப்பட்டார். இதன் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


