கோலாலம்பூர்: மலேசியாவின் சாபா மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கூடிய விரைவில் தேர்தல் நடைபெறும்.
இந்நிலையில், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் உதவியோடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வேட்கையுடன் சாபா முதல்வர் ஹஜிஜி முகம்மது நூர் உள்ளார்.
பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் உதவியைத் திரு ஹஜிஜி முகம்மது நூரின் கபுங்கான் ராக்யாட் சாபா கூட்டணி எதிர்பார்க்கிறது.
சட்டமன்றம் கலைக்கப்பட்டதும் அடுத்த 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தலில் பன்முனைப் போட்டி நிலவக்கூடும் என்று நம்பப்படுகிறது. 73 இடங்களைக் கொண்ட சாபா சட்டமன்றத்தில் எந்த ஒரு தனிக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்று அரசியல் நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர்.
நிலப் பரப்பளவு அடிப்படையில் மலேசியாவின் இரண்டாவது ஆகப் பெரிய மாநிலமாகச் சாபா திகழ்கிறது. அம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் மூன்று பிரதானக் கூட்டணிகள் போட்டியிடுவது வழக்கம்.
கபுங்கான் ராக்யாட் சாபா - பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, சாபா தேசிய முன்னணி, வாரிசான் சாபா கட்சி ஆகியவை அந்த மூன்று பிரதானக் கூட்டணிகளாகும்.
மலேசியத் தீபகற்பத்தில் உள்ள மலாய் - முஸ்லிம் கட்சிகள் தலைமை தாங்கும் பெரிக்காத்தான் நேஷனலும் சாபா சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கும் என்று கூறப்படுகிறது. அக்கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சாபா சட்டமன்றத் தேர்தலை அரசியல் நிபுணர்கள் மிக உன்னிப்பாகக் கண்காணிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அன்வார் எந்த அளவுக்கு அம்மாநில மக்களிடையே பிரபலமாக இருக்கிறார் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டிவிடும் என்று கூறப்படுகிறது.