தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாபாவில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 29, வேட்புமனுத் தாக்கல் தினம் நவம்பர் 15

2 mins read
32ecd418-f00d-478a-86e3-192858e6de01
சாபா சட்டமன்றத் தேர்தல் குறித்த முக்கியத் தேதிகளைக் கோத்தா கினபாலுவில் வியாழக்கிழமை (அக்டோபர் 2025) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹருண் அறிவித்தார். - படம்: மலாய் மெயில்

கோத்தா கினபாலு: சாபா சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர் 2025) 29ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (அக்டோபர் 16) தெரிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் தினம், நவம்பர் 15 ஆம் தேதி. முன்கூட்டியே வாக்களிப்பதற்கான தேதி நவம்பர் 25.

சாபா சட்டமன்றம் இம்மாதம் (அக்டோபர் 2025) 6ஆம் தேதி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு பிரசாரம் தொடங்கும் என்று செய்தியாளர் கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரம்லான் ஹருண் தெரிவித்தார். பிரசாரக் காலம், நவம்பர் 28ஆம் தேதி இரவு மணி 11.59க்கு முடிவுறும் என்றார் அவர்.

சட்டமன்றத் தேர்தலில் 1,784,843 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் பணிகளில் ஏறக்குறைய 33,000 ஊழியர்கள் ஈடுபடுவர். மொத்தம் 940 வாக்களிப்பு நிலையங்கள். தேர்தலுக்கு 116.8 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சல் மூலம் வாக்களிக்க விரும்புவோர் இப்போதே விண்ணப்பிக்கலாம். வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர், ஊடகத் துறையினர், பாதுகாப்புப் படையினர் முதலியோர் அவ்வாறு வாக்களிக்கலாம்.

தேர்தல் சுமுகமாகவும் வெளிப்படையான முறையிலும் நடைபெறுவதை உறுதிசெய்ய 25 அதிகாரிகளும் 196 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரசார நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் 86 அமலாக்கக் குழுக்கள் உதவிக்கரம் நீட்டும்.

தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் வாக்களிப்பையும் வாக்குகள் எண்ணும் பணிகளையும் தேர்தல் ஆணையம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பும்.

குறிப்புச் சொற்கள்