கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் 13 வயதுச் சிறுமி ஸாரா கைரினா மகாதீரை பகடிவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பதின்ம வயதினரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) கோத்தா கினபாலு சிறுவர் நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றத்தை ஏற்க மறுத்தனர்.
பாதிக்கப்பட்டவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக, குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 507சி(1)ன்கீழ், அதே சட்டப் பிரிவு 35வுடன் சேர்த்து குற்றஞ்சாட்டப்பட்டதை அரசு வழக்கறிஞர் நூர் அஸிஸா முகமது உறுதிப்படுத்தினார்.
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிறுவர் சட்டம் 2001ன் பிரிவு 15க்கு இணங்க, வழக்கு விவரங்களை வெளியிடுவதற்கு வழக்கறிஞர் ராம் சிங் தடை உத்தரவு கோரியதையும் வழக்கறிஞர் நூர் அஸிஸா உறுதிப்படுத்தினார்.
வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்சி பிரைமஸ், அடுத்த விசாரணையை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்றம், ஒவ்வொருவருக்கும் 5,000 ரிங்கிட் (S$1,500) பிணை வழங்கியது. அதில் 1,000 ரிங்கிட் வைப்புத்தொகையாக செலுத்தப்பட வேண்டியதோடு, மேலும் ஒரு பிணையாளர் தேவை என நீதிமன்றம் குறிப்பிடப்பட்டது.
ஜூலை 16ஆம் தேதி பப்பார் பகுதியில் உள்ள தமது பள்ளி விடுதிக்கு அருகிலுள்ள வடிகால் ஒன்றில் ஸாரா சுயநினைவின்றிக் காணப்பட்டார். மறுநாள் குவீன் எலிசபெத் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கு, தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.