கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் மாணவியின் மரணம் தொடர்பாக ஐந்து பதின்மவயதினர் மீது புதன்கிழமை (ஆகஸ்ட் 20) குற்றம் சுமத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பகடிவதை செய்யப்பட்ட உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவி ஸாரா கைரினா மகாதீர் தொடர்புடைய வழக்கு.
இத்தகவலைச் சாபா தலைமைச் சட்ட அதிகாரி முகம்மது டுசுக்கி மொக்தார் உறுதி செய்தார்.
சம்பந்தப்பட்ட பதின்மவயதினர் கோத்தா கினபாலு இளையர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.
குற்றம் சாட்டப்பட இருக்கும் பதின்மவயதினர் அனைவரும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சிறுமியை மிரட்டியது மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளால் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியது ஆகியவை தொடர்பாக ஐவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
13 வயது ஸாரா கைரினா ஜூலை 17ஆம் தேதியன்று குவீன் எலிசபெத் மருத்துவமனையில் மாண்டார்.
ஜூலை 16ஆம் தேதி காலை, பள்ளி தங்குவிடுதிக்கு அருகில் உள்ள சாக்கடையில் அவர் சுயநினைவின்றி கிடந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்த ஆகஸ்ட் 12ல் சாபா தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் முடிவெடுத்தது.
ஸாரா கைரினாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை செப்டம்பர் 3ஆம் தேதியன்று தொடங்கவிருக்கிறது.
ஸாரா கைரினாவின் தாயார் சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.