ஜோகூர் பாரு உயர்நிலைப் பள்ளிகளில் பாதுகாப்பு மேம்பாடு

2 mins read
c2c276c4-353e-45cb-bdbb-278333ea3774
ஜோகூர் பாருவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தேர்வுகளுக்குச் செல்லும் முன்பாக ஆசிரியர்கள் மாணவர்களை உலோகங்களைக் கண்டறியும் கருவியால் சோதிக்கின்றனர். - படம்: சமூக ஊடகம்

ஜோகூர் பாரு: பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் தேர்வுகளுக்குமுன் தடைசெய்யப்பட்ட பொருள்களை மாணவர்கள் கொண்டுவருவதைத் தடுக்கவும் ஜோகூர் பாருவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

‘எஸ்பிஎம்’ தேர்வுகள் நடக்கும் அனைத்து நிலையங்களிலும் உலோகங்களைக் கண்டறியும் சாதனங்கள் (metal detectors) பொருத்தப்பட்டுள்ளதாக மாநில நிர்வாக சபையின் ஆலோசகர் அஸ்னான் தமின் தெரிவித்தார்.

கல்வி மற்றும் தகவல் குழுவின் தலைவருமான திரு அஸ்னான், 372 தேர்வு நிலையங்களுக்கும் குறைந்தது ஒரு சோதனைச் சாதனம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பாதுகாப்பு நடவடிக்கையாக நடைபெறும் சோதனைகளின்படி மாணவர்கள் தடைசெய்யப்பட்ட பொருள்களைத் தேர்வுநிலையங்களுக்குள் கொண்டுவருவது தடுக்கப்படும் என்றார் அவர்.

“இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இன்றைய தொழில்நுட்பத்தில் பதிவுகள் செய்யவும், பொதுத் தளங்களில் பகிரவும் பல மின்னியல் சாதனங்கள் உள்ளன. அதுபோன்ற சம்பவங்களை நாங்கள் தேர்வு நிலையங்களில் நிகழாமல் தடுக்க விழைகிறோம். உலோகங்களைக் கண்டறியும் கருவிகளைக் கொண்டு நடத்தப்படும் சோதனைகள், தேர்வு காலங்களில் அன்றாடம் நடைபெறும்.

“மாணவர்கள் காலையிலும் மதியமும் தேர்வு நிலையங்களுக்குள் நுழையும் முன்பாக சோதிக்கப்படுவர்,” என்று ஒரு உயர்நிலைப் பள்ளியை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) பார்வையிட்ட பிறகு திரு அஸ்னான் கூறினார்.

உலோகக் கண்காணிப்புக் கருவிகள் தேர்வுகள் நடைபெறாத மற்ற நேரங்களிலும் பள்ளிகளில் பயன்படுத்தப்படுவது பற்றி அடுத்த ஆண்டு ஆராயப்படும் எனவும் திரு அஸ்னான் தெரிவித்தார்.

அதேசமயம், மாநிலம் முழுவதும் வெள்ளம் ஏற்பட்டாலும் தேர்வுகள் சுமுகமாகத் தொடர, அவசரகால முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். செகாமாட், மெர்சிங் பகுதிகளில் வட்டாரக் கல்வி அலுவலகங்களின் தலைமையில் தற்காலிக உடனடி செயற்திட்டங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் ஏற்படும் காலங்களில் பள்ளிகள், வெள்ள நிவாரண மையங்களாகச் செயல்பட்டாலும் எஸ்பிஎம் தேர்வுகள் மாநில, வட்டார நிலைகளில் தொடர்வதற்காக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் நடந்துள்ளன என்பதை திரு அஸ்னான் உறுதிப்படுத்தினார். அவற்றோடு இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதும் 49,654 மாணவர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுவதாக அவர் மேற்கோள்காட்டினார்.

உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டில் எஸ்பிஎம் தேர்வுகள் மலேசியாவில் நடத்தப்படுகின்றன. அவை சிங்கப்பூரின் பொதுக்கல்வி சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வுகளுக்கு நிகராகும்.

குறிப்புச் சொற்கள்