தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பத்தாண்டுகள் காணாத விற்பனைச் சரிவு: டெஸ்லா

2 mins read
8b761215-902f-4b4e-84cb-7ed39430413e
2025ன் இரண்டாம் காலாண்டில், மின்கார் உற்பத்தி நிறுவனங்களுக்கான சலுகைகள் மூலம் ‘டெஸ்லா’ நிறுவனத்துக்குக் கிடைத்த வருவாய் ஏறக்குறைய 26 விழுக்காடு குறைந்தது.  - படம்: ராய்ட்டர்ஸ்

ஆஸ்டின்: பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘டெஸ்லா’ மின்கார் நிறுவனத்தின் விற்பனை, இந்த ஆண்டின் (2025) இரண்டாம் காலாண்டில் 12 விழுக்காடு குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் மிக மோசமான விற்பனைச் சரிவாக இது கருதப்படுகிறது.

நிறுவனம், US$1.2 பில்லியன் (S$1.5 பில்லியன்) வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு அது US$1.4 பில்லியன் வருவாய் ஈட்டியது.

2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குப் பிறகு அது லாபத்தைப் பதிவு செய்யவில்லை.

புதிதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இல்லாவிட்டாலும் நிறுவனத்தின் அண்மைய நிதி நிலவரக் கலந்துரையாடல்களில் வருங்காலம் தொடர்பான கவலைகளைக் குறைக்கப் போதுமான உறுதிகூறல் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

‘ரோபோ டாக்சி’ சேவைகள் இந்த ஆண்டிறுதிக்குள் புதிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று திரு மஸ்க் முன்னுரைத்திருந்தார். இருப்பினும் மின்வாகனங்களுக்கான ஊக்கத் தொகை காலாவதியாவதால் வர்த்தகம் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

விற்பனைச் சரிவு, கார்களுக்கான சராசரி விலை குறைவாக இருப்பது, மின்கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்தது போன்ற அம்சங்களால் ‘டெஸ்லா’ நிறுவனத்தின் வருவாய் குறைந்ததாகக் கூறப்படுகிறது. எரிசக்தி உற்பத்தி, சேமிப்பு ஆகிய பிரிவுகளிலும் ‘டெஸ்லா’வின் விற்பனை குறைந்துள்ளது.

புதன்கிழமை (ஜூலை 23), நிறுவனப் பங்குகளின் விலை 5.2 விழுக்காடு சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தானியக்கக் கார்கள், நிறுவனத்தின் ‘ஆப்டிமஸ்’ ரோபோ திட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைத் திரு மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

இந்த இரண்டு அம்சங்களிலும் ‘டெஸ்லா’ சிறப்பாகச் செயல்பட்டால் அது உலகின் ஆக மதிப்புமிக்க நிறுவனமாக விளங்கும் என்கிறார் அவர். அதேவேளையில் நிறுவனத்தில் தனது பங்குகளின் விகிதம் அதிகமாக இருக்கவேண்டும் என்றும் திரு மஸ்க் கூறுகிறார்.

இரண்டாம் காலாண்டில், மின்கார் உற்பத்தி நிறுவனங்களுக்கான சலுகைகள் மூலம் ‘டெஸ்லா’ நிறுவனத்துக்குக் கிடைத்த வருவாய் ஏறக்குறைய 26 விழுக்காடு குறைந்தது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம், எரிபொருள் பயன்பாட்டுத் தரநிலை தொடர்பில் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை அகற்றும்போது அந்தச் சலுகைகள் மூலம் கிடைக்கும் வருவாய் மேலும் குறைய வாய்ப்புண்டு.

குறிப்புச் சொற்கள்