நியூயார்க்: ஏறத்தாழ ஒரு மில்லியன் மின்னடுப்புகளை திரும்பப் பெறுவதாக சாம்சுங் நிறுவனம் அறிவித்து உள்ளது.
அமெரிக்காவில் தற்செயலாக இயக்கப்பட்ட அந்த அடுப்பால் தீச்சம்பவங்கள் நிகழ்ந்ததுடன் குறைந்தபட்சம் ஏழு செல்லப் பிராணிகள் உயிரிழந்துவிட்டன.
இதனை அமெரிக்காவின் பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) தெரிவித்தது.
சாம்சுங் எலெக்ட்ரிக் நிறுவனம் 2013ஆம் ஆண்டு முதல் விற்று வரும் 30 வகையான மின்னடுப்புகளில் ஒன்றை வைத்திருக்கும் பயனீட்டாளர்கள், மனிதர் அல்லது செல்லப்பிராணிகள் அருகில் வந்தால் தானாக இயக்கப்படும் அபாயத்தைக் குறைக்க, அதன் இயக்கத்தை நிறுத்தும் வசதியை இலவசமாகப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
1.1 மில்லியனுக்கும் மேற்பட்ட அத்தகைய அடுப்புகளை நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது. அதனால் ஏற்பட்ட 250 தீச்சம்பவங்களில் ஏறக்குறைய 40 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் எட்டுப் பேருக்கு மருத்துவ சிகிச்சைத் தேவைப்பட்டது.
இது தவிர, சொத்துகளுக்குப் பெருத்த சேதத்தை அந்த அடுப்பு ஏற்படுத்திய 18 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் ஆணையம் தனது அறிக்கையில் சுட்டியது.
மொத்தம் எத்தனை செல்லப் பிராணிகள் உயிரிழந்தன என்றும் பழுதைக் கண்டறிய 11 ஆண்டுகள் ஆனது ஏன் என்றும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆணையம் பதிலளிக்க மறுத்துவிட்டது.
சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள ஆணையம் அல்லது சாம்சுங் நிறுவனத்தின் இணையப் பக்கங்களை நாடலாம் என்று அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
தானாக இயக்கப்படும் எந்தவொரு அடுப்பு வகையையும் பயனீட்டாளர்கள் கவனத்துடன் இயக்க வேண்டும் என்று சாம்சுங் நிறுவனத்தின் பேச்சாளர் திரு கிறிஸ்டஃபர் லாங்லாய்ஸ் தெரிவித்து உள்ளார்.
மின்னடுப்பின் மேல் பகுதிகயை சுத்தமாகவும் சிறுவர்கள் மற்றும் செல்லப்பிராணிகள் அண்டாத வகையிலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

