மணிலா: குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டர்டே தாயகம் திரும்பியுள்ளார்.
இதற்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அவர் தமது தந்தையும் பிலிப்பீன்சின் முன்னாள் அதிபருமான ரோட்ரிகோ டுட்டர்டேயுடன் தி ஹேக்கில் இருந்தார்.
தி ஹேக்கில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்தில் திரு டுட்டர்டே குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
மனிதாபிமானத்துக்கு எதிராக நடந்துகொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமது தந்தை சார்பாக வாதிட வழக்கறிஞர் குழு தயாராக உள்ளதாகவும் தி ஹேக்கில் தமது பணிகள் நிறைவுபெற்றுவிட்டதாகவும் பிலிப்பீன்சுக்குத் திரும்புவதற்கு முன்பு திருவாட்டி சாரா டுட்டர்டே செய்தியாளர்களிடம் கூறினார்.
அனைத்துவக குற்றவியல் நீதிமன்றத்துக்குத் தேவையான கடைசி ஆவணத்தைத் தாம் சமர்ப்பித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
வழக்கு விசாரணைக்குத் தேவையான பணத்தைப் பெற தமது குடும்பம் இனி நிதி திரட்டப்போவதில்லை என்று துணை அதிபர் சாரா டுட்டர்டே கூறினார்.
மாறாக, பணம் தேவைப்பட்டால் தங்களுக்குச் சொந்தமான பொருள்களை விற்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
திரு டுட்டர்டே மார்ச் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதே நாளன்று அவர் நெதர்லாந்தில் உள்ள திரு ஹேக்கிற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் பிலிப்பீன்சின் அதிபராக இருந்தபோது போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆனால், அதில் ஆயிரக்கணக்கான அப்பாவி ஏழை ஆடவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தி ஹேக்கில் இருந்தவாறு தமது தந்தைக்குத் தேவையான சட்ட உதவிகளுக்கு திருவாட்டி சாரா டுட்டர்டே ஏற்பாடு செய்தார்.
நீதிமன்றக் கட்டடத்துக்கு வெளியே அவர் பல செய்தியாளர் கூட்டங்களை நடத்தினார்.
இந்நிலையில், தமது தந்தைக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) இரவு திருவாட்டி சாரா டுட்டர்டே பிலிப்பீன்ஸ் திரும்பினார்.
பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியரைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக திருவாட்டி சாரா டுட்டர்டே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.