பெரிக்கத்தான் நேஷனலில் எம்ஐசி இணைந்ததாகக் கூறப்படுவதை சரவணன் மறுத்தார்

பெரிக்கத்தான் நேஷனலில் எம்ஐசி இணைந்ததாகக் கூறப்படுவதை சரவணன் மறுத்தார்

1 mins read
7ff569dc-870d-4ae5-8f39-acdcaffa859d
மலேசிய இந்தியக் காங்கிரசின் துணைத் தலைவர் சரவணன் கூட்டணி பற்றி இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்கிறார். - கோப்புப் படம்: ஃபிரிமலேசியா.காம்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய இந்தியர் காங்கிரஸ், பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் இணைந்துவிட்டதாகக் கூறப்படுவதை அதன் துணைத் தலைவர் எம். சரவணன் மறுத்துள்ளார்.

முன்னதாக பெரிக்காத்தான் நேஷனலின் தலைமைச் செயலாளரான தாக்கியூதீன் ஹாசன் மலேசிய இந்தியர் காங்கிரஸ் இணைந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

அதனை மறுத்த எம். சரவணன், இந்த விவகாரம் குறித்து கட்சியின் மத்திய செயற்குழு இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்று விளக்கமளித்தார்.

“பெரிக்காத்தான் நேஷனலில் சேர எம்ஐசி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மத்திய செயற்குழுவே இதனை முடிவு செய்யும்,“ என்று ஃப்ரிமலேசியாடுடேயிடம் அவர் தெரிவித்தார்.

தாபா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன், பெரிக்காத்தான் நேஷனலில் சேர விண்ணப்பிக்கவும் இல்லை என்றார்.

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசினிடமிருந்து அழைப்பு வந்தது. அது குறித்து விவரம் கேட்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

எம்ஐசி தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரனும் தாக்கியூதினும் இன்று இரவு (மார்ச் 17) சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து தமக்குத் தெரியாது என்று திரு சரவணன் கூறினார்.

பெரிக்காத்தானில் எம்ஐசி சேர கூட்டணியின் உச்சமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக முன்னதாக தாக்கியூதின் தெரிவித்திருந்தார்.

அதனையொட்டி தாம் விக்னேஸ்வரனை இன்றிரவு சந்திக்கவிருப்பதாகவும் கட்சி கூட்டணியில் இணைவதற்கான அதிகாரபூர்வ கடிதத்தை வழங்கவிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

அண்மையில் தேசிய முன்னணி தலைவர்கள் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் எம்ஐசி தலைவர்கள் கலந்துகொண்டதால் அக்கட்சி அதே கூட்டணியில் இருப்பதற்கான தோற்றத்தை ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்