பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக ஜனவரி 6ஆம் தேதியன்று பேரணி நடைபெற இருக்கிறது.
பேரணியில் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வர் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
இப்பேரணி கட்சிக்கும் இன அடிப்படையிலான அரசியலுக்கும் அப்பாற்பட்டது என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான திரு சரவணன் கூறினார்.
நஜிப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் மஇகா பேரணியில் கலந்துகொள்வதாக அவர் தெரிவித்தார்.
“அரசியல் ஆதாயத்துக்காகப் பேரணியில் கலந்துகொள்ளவில்லை. நஜிப்புக்கு ஆதரவாக ஜனவரி 6ஆம் தேதியன்று ஆயிரக்கணக்கான மலேசியர்கள் அமைதியான முறையில் பேரணி நடத்த இருக்கின்றனர்,” என்றார் திரு சரவணன்.
ஊழல் குற்றம் புரிந்ததற்காக நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அரச மன்னிப்பு பெற்றதை அடுத்து அவரது தண்டனைக் காலம் பாதியாகக் குறைக்கப்பட்து.
எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் தாம் வைக்கப்பட வேண்டும் என்றும் தமது முறையீட்டு மனுவுக்குச் சாட்சியத்தை சமர்ப்பிக்க அவர் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பாகவே பேரணியில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் திக்கியுதீன் ஹசான் தமது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நஜிப்புக்கு ஆதரவுக் குரல் கொடுக்க வேண்டும் என்று பாஸ் கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பேரணியில் அம்னோ கட்சியும் கலந்துகொள்ள இருக்கிறது.
பேரணி நடைபெறும் இடத்துக்கு நஜிப்பின் ஆதரவாளர்களை 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஏற்றிச் செல்லும் என்று கூறப்படுகிறது.
அவர்கள் அம்னோ மற்றும் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

