கூச்சிங்: வெள்ளம் காரணமாக சரவாக்கில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் சனிக்கிழமை (ஜனவரி 25) காலைவரை 34 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேர் தஞ்சம் புகுந்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இவர்களுக்காக பெத்தோங் மற்றும் பிந்துலு பகுதிகளில் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் (பிபிஎஸ்) இன்னும் இயங்கி வருகின்றன.
சரவாக் பேரிடர் மேலாண்மைக் குழுச் செயலகம் வெளியிட்டுள்ள தகவலில், பெத்தோங் பகுதியில் உள்ள திவான் ரூமா டாயாக் நிவாரண முகாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 21 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 13 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பிந்துலு பகுதியில் உள்ள ரூமா ஸ்டீவன் நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
செலாங்காவ், மாத்து, செபாவ் ஆகிய மாவட்டங்களில் 18 இடங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும் இதனை மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் சரவாக் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

