சரவாக் சட்டமன்றம் அக்டோபர் 26ல் கலைக்கப்படும்

சரவாக் சட்டமன்றம் அக்டோபர் 26ல் கலைக்கப்படும்

படம்: த ஸ்டார்

23 Oct 2026 - 6:05 pm

2 mins read

கூச்சிங்: சரவாக் மாநில சட்ட மன்றம் 13வது மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், அக்டோபர் 26ஆம் தேதி, திங்கட்கிழமை கலைக்கப்பட உள்ளது.

சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி துன் ஓபேங் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) பிற்பகலில் கூச்சிங்கிலுள்ள சத்ரியா பெர்டிவி வளாகத்தில் நடந்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் சட்ட மன்றம் கலைக்கப்படுவது பற்றி அறிவித்தார்.

சரவாக் ஆளுநர் துன் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபரின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“சரவாக் மாநில அரசியலமைப்பின் பிரிவு 21(2)ன்படி, சட்ட மன்றத்தைக் கலைப்பதற்கான எனது கோரிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது அக்டோபர் 26ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்,” என்று அபாங் ஜொஹாரி கூறினார்.

“எனவே, அரசியலமைப்பின் பிரிவு 21(4)ன் படி, சட்டமன்றத்தைக் கலைத்த தேதியிலிருந்து 60 நாள்களுக்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,” என்றும் சரவாக் முதல்வர் சொன்னார்.

கபுங்கான் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்) கட்சியின் தலைவருமான அபாங் ஜொஹாரி, சட்டமன்றம் கலைக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு முறையாகத் தெரிவிக்கப்படும் என்றும் அதன் மூலம் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

“இந்தக் காலகட்டத்தில், அரசாங்கம் ஓர் இடைக்கால நிர்வாகமாகத் தனது பொறுப்புகளை நிறைவேற்றும். அதேவேளையில், அரசியலமைப்புச் சட்டத் தேவைகளையும் மரபுகளையும் முறையாகப் பின்பற்றும்.

“பொது நிர்வாகம், அத்தியாவசியச் சேவைகள் தொடர்ந்து செயல்படுவதன் மூலம், மக்களின் தேவைகளும் நலன்களும் கவனிக்கப்படுவதை உறுதி செய்யும்,” என்று அவர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

தற்போதைய மாநிலச் சட்டமன்றத்தின் பதவிக்காலம், அது முதன்முதலில் கூடிய 2022, பிப்ரவரி 14ஆம் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடையும் என்று அபாங் ஜொஹாரி குறிப்பிட்டார்.

2021, டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற மாநிலத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்றதிலிருந்து, சரவாக்கின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லவும், அதன் பொருளியலை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பு, பொதுச் சேவைகளை மேம்படுத்தவும், கூட்டாட்சி அரசியலமைப்பு, 1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்திற்கு இணங்க சரவாக்கின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கவும் ‘கபுங்கன் பார்ட்டி சரவாக்’ அரசாங்கம் பணியாற்றியுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தம்மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்த சரவாக் மக்களுக்கும், அதேபோல் சேவை, அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் அபாங் ஜொஹாரி நன்றி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஆளுநர்தேர்தல்சரவாக்