கூச்சிங்: தீபகற்ப மலேசியாவில் நோய், நிலப் போட்டி மற்றும் அரச ஆணைகளால் பன்றி வளர்ப்பு அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், கிழக்கு மலேசிய மாநிலமான சரவாக், நாட்டின் பன்றி இறைச்சி உற்பத்தி மையமாக தனது நிலையை விரைவாக உறுதிப்படுத்தி வருகிறது. அதோடு, சிங்கப்பூருக்கான ஏற்றுமதி வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது.
சரவாக் தற்போது மலேசியாவில் உயிருள்ள பன்றிகளைச் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ய உரிமம் பெற்ற ஒரே மாநிலம் ஆகும். 2024ஆம் ஆண்டில் மட்டும், கிரீன் பிரீடர் என்ற ஒரு பண்ணை, 121,000க்கும் மேற்பட்ட உயிருள்ள பன்றிகளைச் சிங்கப்பூருக்கு அனுப்பியது. இது அந்நாட்டின் மொத்த பன்றி இறைச்சி இறக்குமதியில் 8.2 விழுக்காடாகும்.
2025ஆம் ஆண்டில் 350,000 ஆக இருந்த பன்றி உற்பத்தியை 2030ஆம் ஆண்டுக்குள் 860,000 ஆக இரட்டிப்பாக்கி, ஏற்றுமதியில் 1 பில்லியன் ரிங்கிட் ஈட்டும் இலக்கை அந்த மாநிலம் கொண்டுள்ளதாக, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“நாங்கள் பன்றிகளைப் பொக்கிஷமாகக் கருதுகிறோம். எனவே, அவற்றைப் பயன்படுத்தி மக்கள் வாழ்க்கையை நடத்த ஊக்குவிப்பது எங்களுக்கு எளிதானது,” என்று சரவாக்கின் உணவுத் தொழில் அமைச்சர் ஸ்டீபன் ருண்டி உடோம், தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். மாநிலத்தின் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மையினரிடையே பன்றி இறைச்சியின் வலுவான கலாசார முக்கியத்துவத்தை அவர் எடுத்துக்காட்டினார். இதில் பூர்வீக மற்றும் சீன இனச் சமூகங்களும் அடங்கும்.
தீபகற்ப மலேசியாவில் தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் சரவாக்கின் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் முக்கிய உற்பத்தியாளராக இருந்த சிலாங்கூரில், சுற்றுச்சூழல் மாசுபாட்டை நிவர்த்தி செய்ய சுல்தானின் உத்தரவைத் தொடர்ந்து, பன்றி வளர்ப்பு உரிமங்களை வழங்குவதை நிறுத்துவதாகவும், தற்போதுள்ள அனைத்து பண்ணைகளையும் மூட இலக்கு வைத்துள்ளதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
துர்நாற்றம், நீர் மாசுபாட்டைக் காரணம் காட்டி பினாங்கிலும் பேராக்கிலும் இதேபோன்ற எதிர்ப்பு எழுந்துள்ளது.
தீபகற்பத்தில் அதன் தொழில் சுருங்கி வருவதால், மலேசியா ஒட்டுமொத்தமாக இறக்குமதியையே அதிகம் நம்பியுள்ளது. நாட்டின் பன்றி இறைச்சி விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு இப்போது வெளிநாடுகளிலிருந்து பெறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சரவாக்கின் ஏற்றுமதி சார்ந்த மாதிரி முற்றிலும் மாறுபட்டது. வட்டார உணவுப் பாதுகாப்பில் அதை ஒரு முக்கிய பங்காளியாக நிலைநிறுத்துகிறது.

